தீபத்திருவிழா நாளன்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு

*பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு தரிசனம் செய்ய வரும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபம் வரும் 10ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபத்திருநாளன்று மகா தீப தரிசனத்திற்கு உபயதாரர், கட்டளைதாரர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள், கட்டண டிக்கெட் பெற்றுள்ளவர்கள் என 6 ஆயிரம் பேரும், பொது தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மகா தீப தரிசனத்திற்காக வரும் விவிஐபிக்களுக்கு இந்த ஆண்டு கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கூடுதலாக பாதுகாப்பு வசதிகள் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளி மேல் பகுதியில் விவிஐபிக்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே இடம் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு மழை வரும் என்பதால் முன்கூட்டியே விவிஐபிக்கள் அமரக்கூடிய இடங்களில் தற்காலிகமாக ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஷெட் கண்ணாடி பிளாஸ்டிக் இழையினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமர்ந்த இடத்திலேயே வெளியில் இருக்க கூடிய அனைத்தையும் தெளிவாக பார்க்க முடியும். மழை வந்தாலும் நனையாமல் தெளிவாக மகா தீபம் மற்றும் கொடிகம்பம் அருகே எழுந்தருளும் சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அதிகாரிகள் தனிக்கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால், கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வழியாக வரும் பக்தர்களுக்கு மழையில் நனையாமல் இருப்பதற்கு தேவையான எந்தவிதமான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories: