திருவாரூர்- காரைக்கால் ரயில்பாதையில் மின்மயமாக்கும் பணி தீவிரம்

நாகை : திருவாரூரில் இருந்து காரைக்கால் வரை மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பிரிட்டிஷ் அரசாங்கம் 1858 ல் மராத்திய மன்னர்களிடமிருந்து தஞ்சாவூர் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. 1861ம் ஆண்டில் இந்தியாவின் கிரேட் சௌதேர்ன் ரயில்வே நாகை மற்றும் திருச்சிராப்பள்ளி (அப்போது திருச்சினோபொலி என்று அழைக்கப்பட்டது) இடையே ரயில் பாதையை உருவாக்கியது. இந்த பாதை 1862ம் ஆண்டில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது ஒரு அகல பாதையாக இருந்தது.

நாகூர் தர்காவிற்கு சொந்தமான நிலமும், பொறையாரைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான காம்பவுண்ட் கொண்ட ஒரு பங்களாவும் நாகையில் கையகப்படுத்தப்பட்டது. நாகையில் ரயில்வே ஸ்டேசன் செயல்பட்டு வந்தது. இதன் பின்னர் 1874ம் ஆண்டில் தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழ் வந்தவுடன் நாகை -திருச்சிராப்பள்ளி அகல பாதை 1875 ல் மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் திருச்சியில் இருந்து காரைக்கால் வரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. மிகவும் பழைமை வாய்ந்த ரயில் பாதையான திருச்சி-காரைக்கால் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இதன் மொத்த தூரம் 153 கிலோ மீட்டர் ஆகும். மின் மயமாக்கும் பணிக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை ரயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக தஞ்சை-திருச்சி இடையே இரு வழிப்பாதையில் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் முடிவுபெற்றுள்ளது. இந்த பாதையில் ஒரு வழிப்பாதைக்கு தலா 1200 உயர் மின் கம்பம் என 2400 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்டமாக தஞ்சை-திருவாரூர் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

மூன்றாம் கட்டமாக திருவாரூர் வழித்தடத்தில் சாலியமங்கலத்தில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக மின் கம்பங்கள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மின்மயமாக்கும் பணி நடந்து வருவதால் நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றவுடன் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் திருச்சி-காரைக்கால் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சேவை நடைபெறும். இதனால் பயணிகளின் நேரம் மிச்சம் ஆகும். சுற்றுப்புறசூழல் பாதுகாக்கப்படும். அதே போல் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்வோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Related Stories: