×

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்க 3ம் கட்டமாக 116 புதிய பேட்டரி வாகனங்கள்

*பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை

வேலூர் : வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கும் பணிகளை விரைவுப்படுத்த 3ம் கட்டமாக 116 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதுமாக குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு துப்புரவு பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பைகளான இலை, தழை, காகிதம் போன்றவற்றையும், மக்காத பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் என்று தனியாக சேகரித்து வருகின்றனர்.

இதற்காக தள்ளுவண்டிகள், 3 சக்கர சைக்கிள்கள் போன்றவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 2 கட்டங்களாக 200 பேட்டரி வாகனங்கள் வாங்கி, குப்பைகள் எளிதில் சேகரிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியை மேலும் எளிதாக்கவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3ம் கட்டமாக 116 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் 3வது கட்டமாக 116 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தற்போது சோதனை முறையில் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கமிஷனர் ஆலோசனைக்கு பின்னர் எந்தெந்த வார்டுகளுக்கு பேட்டரி வாகனங்கள் தேவையோ அந்த வார்டுகளுக்கு பிரித்து வழங்கப்படும். தற்போது தள்ளுவண்டிகள் 75, 3 சக்கர சைக்கிள்கள் 200 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vellore Corporation Smart City , Vellore ,SmartCity Project ,new battery vehicles,biodegradable
× RELATED வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி...