போச்சம்பள்ளி அருகே சொத்தை அபகரித்து மகன் தவிக்க விட்டதால் பிச்சை எடுத்த மூதாட்டி

* மகனிடம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்டிஓவிடம் கண்ணீர்

*   3 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து திரும்ப ஒப்படைப்பு

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே சொத்துகளை அபகரித்து, தாயை தவிக்க விட்ட அரசு ஊழியரிடமிருந்து 3 ஏக்கர் நிலத்தை மீட்ட கிருஷ்ணகிரி ஆர்டிஓ, அவரது தாயிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள்(76). இவரது மகன் முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். முருகன் மனைவி சக்தி,  ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். முனியம்மாளுக்கு 7 ஏக்கர் நிலமும், ஒரு வீடும் இருந்துள்ளது. முனியம்மாளின் கணவர் சின்னசாமி உயிரோடு இருந்தபோது, முருகன் பெற்றோர் இருவரையும் நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக உறுதியளித்து நிலத்தையும், வீட்டையும் தனது பெயருக்கு மாற்றம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு சின்னசாமி இறந்துவிட்டார். அவர் இறந்த சில நாட்களில், முருகன் முனியம்மாளை வீட்டை விட்டு துரத்தினார். இதனால், கடந்த 18 வருடங்களாக முனியம்மாள், அதே கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை அமைத்து வசித்து வருகிறார். அங்குள்ள வீடுகளில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில், தனது மகனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு, போச்சம்பள்ளி தாசில்தாரிடம் கடந்த 5ம் தேதி மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்த தாசில்தார் முனுசாமி, இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி ஆர்டிஓவுக்கு  அனுப்பி வைத்தார். இதையடுத்து, நேற்று கிருஷ்ணகிரி ஆர்டிஓ தெய்வநாயகி அங்கம்பட்டி கிராமத்திற்கு சென்று, முனியம்மாளிடம் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அவரது மகன் முருகனிடமும், மருமகள் சக்தியிடமும் விசாரணை நடத்தினார்.

அதை தொடர்ந்து, மூத்தோர் குடிமக்கள் சட்டத்தின் கீழ், தானப்பத்திரம் செய்த 3 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து, மீண்டும் முனியம்மாளிடம் வழங்க பரிந்துரை செய்தார். மேலும், முருகன் மாதந்தோறும் முனியம்மாளுக்கு ₹10,000 வழங்க ஒப்புதல் அளித்தார். மகனிடமிருந்து நிலத்தை மீட்டு கொடுத்த ஆர்டிஓ தெய்வநாயகிக்கு, முனியம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தாயை தவிக்கவிட்டதால் அரசு ஊழியரிடமிருந்து 3 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: