பரங்கிப்பேட்டை அருகே கடற்கரை ஓரத்தில் உடைந்த நிலையில் கரை ஒதுங்கிய கண்டெய்னர்

புவனகிரி : பரங்கிப்பேட்டை அருகே கடற்கரை ஓரத்தில் உடைந்த நிலையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடலோர கிராமங்கள் அதிகம் உள்ளது. இந்த கடற்கரை பகுதியில் உடைந்து, சிதைந்த நிலையில் கண்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசாரும், பரங்கிப்பேட்டை சட்டம் ஒழுங்கு போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

 அப்போது அன்னங்கோயில் மற்றும் புதுப்பேட்டை கிராமங்களுக்கு இடையே கடற்கரையோரத்தில் உடைந்த நிலையிலும், சிதைந்த நிலையிலும் கன்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.இதை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நடுக்கடலில் கப்பலில் கண்டெய்னரை ஏற்றிச் செல்லும்போது கடலில் தவறி விழுந்ததா? அல்லது உடைந்து போனதால் யாராவது கடலில் தள்ளி விட்டு சென்றார்களா என்பது தெரியவில்லை. நடுக்கடலில் கண்டெய்னர் விழுந்திருக்கலாம் என்றும், தொடர்ச்சியான கடல் சீற்றம் காற்று, மழை போன்றவற்றில் சிக்கி கண்டெய்னர் சிதைந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கண்டெய்னர் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் பரவியதையடுத்து இளைஞர்கள் சிலரும் கடற்பகுதிக்கு வந்து பார்த்து சென்றனர். கண்டெய்னர் எப்படி கரை ஒதுங்கியது? என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டெய்னர் கரை ஒதுங்கியதில் புதிய தகவல்

போலீசார் விசாரணையில், கடந்த மாதம் 23ம் தேதி சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 25 காலி கண்டெய்னர்கள் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஒரு கப்பலில் ஐதராபாத் நோக்கி சென்றுள்ளது. அப்போது நடுக்கடலில் பலத்த காற்று மற்றும் மழையால் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்து மூழ்கி உள்ளது.

இந்த நிலையில்தான் கப்பலில் மூழ்கிய கண்டெய்னர்களில் ஒன்று சேதமடைந்து பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது. மேலும் இதுபோல் 2 கண்டெய்னர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் கடற்கரையோரம் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலில் மூழ்கிய 25 கண்டெய்னர்களில் 3 மட்டும் கிடைத்துள்ள நிலையில், மற்ற 22 கண்டெய்னர்கள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

Related Stories: