புதிதாக கட்டி ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில் திருச்சி-திண்டுக்கல் சாலை கோரையாறு பாலத்தில் உடைப்பு

*அச்சத்துடன் கடந்து செல்லும் வாகனஓட்டிகள்

திருச்சி : புதிதாக கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு பெறாத நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோரையாறு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பஸ்கள், லாரிகள், பள்ளி வாகனங்கள், டூவீலர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. மேலும் இச்சாலை பகுதியில் தனியார் நிறுவனங்கள், ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இச்சாலையில் அமைந்துள்ள கோரையாறு பாலம் ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

மேலும் எதிர் எதிரே 2 வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து கோரிக்கை மனு சம்மந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று இந்த பாலத்தை நெடுஞ்சாலையினர் இரு வழிப்பாதையாக மாற்றி புதிய பாலம் கடந்தாண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 12.12.2018ம் ஆண்டு திறந்து வைத்தார். தொடர் பருவ மழை பெய்ததாலும், தற்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையாலும் தாக்குப்பிடிக்க முடியாதபடி இருவேறு இடங்களில் பாலம் சேதமடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு மோசமாக உள்ளது. இதில் தற்போது சிமெண்ட் கலவையை போட்டு நெடுஞ்சாலைத்துறையினர் அதை பூசி மூடிவிட்டனர். மழை மீண்டும் பெய்தால் பாலத்தின் இரு இடங்களில் மறுபடியும் தேமடைந்து ஓட்டை விழும் அவலம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சரி செய்யாவிட்டால் அந்த பாலம் பலமிழந்து விடக்கூடிய அபாய நிலை உருவாகும் என்று வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர இந்த பாலத்தின் இருபுறங்களிலும் போதிய மின் விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் பாலம் இருப்பது தெரியாத அளவிற்கு கும்மிருட்டு நிலவுகிறது. எனவே பாலத்தின் இருபக்கத்திலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாய் உள்ளது. இன்னும் ஓராண்டு நிறைவு பெறாத நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கோரையாறு பாலத்தில் ஏற்பட்டுள்ள சாலை சேதத்தை உடனடியாக சீரமைத்து வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: