×

தமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் பின்வருமாறு; அரசு கஜானாவை காலி செய்ய முதல்வர், துணை முதல்வர் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜி.எஸ்.டி. சட்டத்தை செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வருவாயை மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்து அளிக்காததை தமிழக முதல்வர் கண்டுகொள்ளாததற்கு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு ரூ.9,270 கோடி இழப்பு

ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழகத்துக்கு ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை என்று தெரிவித்த ஸ்டாலின், மோடி அரசு மீது வழக்கு தொடர்ந்தாவது தமிழத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மாநில நிதி தன்னாட்சி உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரணாகதி செய்துள்ளதாக ஸ்டாலின் தமது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழக அரசுக்கு இழப்பு எவ்வளவு என்று முதலமைச்சரும், நிதி அமைச்சரும் அறிக்கை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏமாற்றிய மத்திய அரசு

மத்திய அரசு வசூலிக்கும் ஜி.எஸ்.டி. வரியில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியாது என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதால் மாநில அரசுகளுக்கு இரு மாதத்துக்கு ஒரு முறை இழப்பீடு தர முதலில் மத்திய அரசு உறுதியளித்தது. மத்திய அரசின் வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது என தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,government ,AIADMK ,MK Stalin ,GST ,DMK ,Government of Tamil Nadu , GST, Government of Tamil Nadu, Financial Status, DMK Leader, MK Stalin
× RELATED உலக எய்ட்ஸ் தினம் தொற்று இல்லாத நிலையை...