சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாகவே மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் குமரிக் கடல் பகுதியல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 80 மிமீ மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் 40 மிமீ, பாம்பன் 30 மிமீ, ராதாபுரம் 20 மிமீ, கன்னியாகுமரி 10 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல மேல்அடுக்கில் காற்று சுழற்சி நிலை கொண்டு  இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: