குடும்ப தகராறில் விபரீதம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவன் கொலை : மனைவி கைது

பெரம்பூர்:  சென்னை திரு.வி.க நகர் கிருஷ்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா  (39). இவர், பாரிமுனையில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு, கடந்த 12 வருடங்களுக்கு முன், நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி காலை இவர்களின் குழந்தைகள் இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரடைந்த நஸ்ரின் அடுப்பில்  சூடாக கொதித்துக் கொண்டு இருந்த  எண்ணெயை  எடுத்து உபயதுல்லா மீது  ஊற்றியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, உடல் முழுவதும் வெந்த நிலையில்  உபயதுல்லா துடிதுடித்து கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நஸ்ரின் உடனடியாக அங்கிருந்து தலைமறைவானார். இதுகுறித்து திரு.வி.க நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து நஸ்ரினை தேடிவந்தனர். இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள தனது தந்தை வீட்டில் பதுங்கி இருந்த  நஸ்ரினை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உபயதுல்லா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>