மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை

சென்னை: அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம், இந்திரா நகர் சர்வீஸ் சாலையை சேர்ந்தவர் குமார் (50). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பச்சைம்மாள் (43). நேற்று மதியம் குமார் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றபோது, பச்சையம்மாள் கடையில் இருந்தார். அப்போது, மொபட்டில் வந்த தம்பதி, பச்சையம்மாளிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, அவர் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

* திருவல்லிக்கேணி துலுக்காத்தம்மன் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த 3 உண்டியல்களை நேற்று முன்தினம் உடைத்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* பீர்க்கன்காரணை அமுதா நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி தேவகி (30). தம்பதி இடையே நேற்று தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த தேவகி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், தாமு நகரை சேர்ந்த சிவக்குமார் (36), திருப்பூர் ரயில் நிலையத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். சென்னையில் நடைபெறும் தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்ற இவர், நேற்று மாலை நண்பரை பார்க்க மின்சார ரயில் மூலம் கொரட்டூர் வந்து, அங்கு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ரயில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

* காசிமேடு புது காமராஜ் நகரை சேர்ந்த சமீம் (32) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் மற்றும் ₹11 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

* புழல் அடுத்த காவாங்கரை மகாராஜா நகரை சேர்ந்தவர் வெங்கட கிரன்குமார் (23). தனியார் மருந்து கடையில் விற்பனை பிரதிநிதி. இவர், நேற்று எம்.ஆர்.எச் ரோயில் வெஜிடேரியன் நகர் அருகே பைக்கில் சென்றபோது, சரக்கு லாரி மோதி இறந்தார்.

* தரமணி பகுதியில் செல்போனில் ஆர்டர் செய்பவர்களுக்கு, அவர்களின் இடத்திற்கே சென்று கஞ்சா விற்று வந்த ஒடிசாவை சேர்ந்த புளு ஜின்னா (21), கானகம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த பாலாஜி (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதிமுக பிரமுகரிடம் செல்போன் பறிப்பு

கொடுங்கையூர்  கிருஷ்ணமூர்த்தி நகர் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகரும்,  முன்னாள் கவுன்சிலருமான ரமேஷ் நேற்று முன்தினம் தனது அலுவலகம் வெளியே  நின்று பேசிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். இதேபோல், கொடுங்கையூர் ஜம்புலிங்கம் காலனியை சேர்ந்த விஜயகுமார் (41) நேற்று காலை நடைபயிற்சி செய்தபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

Related Stories: