என் மகளின் ஆத்மா சாந்தி அடையும் : டிஷா தாயார் உருக்கம்

கால்நடை பெண் டாக்டர் டிஷாவின் தந்தை கூறுகையில், “என் மகளை கொடூரமாகக் கொன்ற குற்றவாளிகள் நான்கு பேரும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். செய்த தவறுக்கு 9 நாட்களில் அவர்களுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. நீதி வென்றது. இதற்காக போலீசாருக்கும் தெலங்கானா மாநில அரசுக்கும் நன்றி தெரிரித்துக் கொள்கிறேன்” என்றார். பெண் டாக்டர் டிஷாவின் சகோதரி கூறுகையில், “இந்த என்கவுன்டர் சம்பவம், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்.  குற்றவாளிகள் இப்படி திடீரென என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிவில் அவர்கள் தூக்குதண்டனை பெற்று தூக்கிலிடப்படுவார்கள் என்றுதான் நினைத்தோம். என் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து எங்களுடன் சேர்ந்து நீதிக்காக போராடிய அனைவருக்கும் நன்றி ெதரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு எதிராக  இதுபோன்ற குற்றங்கள் செய்வதற்கு இனிமேல் அச்சம் ஏற்படும்.” என்றார்.

பெண் டாக்டர் டிஷாவின் தாய் விஜயம்மா கூறுகையில், “என் மகளின் உயிரை கொடூரமாக பறித்த அந்த நான்கு குற்றவாளிகளின் முகத்தை இப்போதாவது பார்க்க விரும்புகிறேன். அவர்களுக்கு கிடைத்த தண்டனை மூலம் என் மகளின் ஆத்மா தற்போது சாந்தி அடைந்திருக்கும்.  இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் இனிமேல் நடக்காது” என்று கூறும்போது, கண்ணீர் மல்க அவரால் பேச முடியாமல் கதறி அழுதார்.

ஆரம்பித்த இடத்திலேயே வாழ்க்கை முடிந்தது
என்கவுன்டர் நடந்த இடத்தில் ஒருபக்கம் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், மறுபுறம் விளைநிலங்களும் இருக்கும் இடமாகும். இவைகளுக்கு இடைப்பட்ட சிறிய பகுதியில்தான் 4 குற்றவாளிகளின் சடலங்களும் கிடந்தன. அதில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தான். அங்கிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் தான், பெண் டாக்டர் டிஷா எரித்துக் கொல்லப்பட்டிருந்தார். குற்றவாளிகள் எங்கு குற்றத்தை ஆரம்பித்தார்களோ அங்கேயே அவர்களின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது.

10 நாளில் நடந்த சம்பவங்கள்...
நவ. 27: சம்சாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கச்சிபோலியில் உள்ள கிளினீக் ஒன்றுக்கு மொபைட்டில் சென்ற பெண் டாக்டர் டிஷா இரவு 9.30 மணி அளவில் மாயமானார்.
நவ. 28: அதிகாலை 3.30 மணி அளவில் டிஷாவின் தங்கை சம்சாபாத் போலீசில் புகார் செயதார். மொபைட்டின் டயர் பஞ்சராகி விட்டதால், அருகிலிருந்த சிலர் தனக்கு உதவுவதாக டிஷா செல்போனில் கூறியதாக அவரது தங்கை போலீசில் தெரிவித்தார்.
காலை 9 மணி: தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அடியில் டிஷாவின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. அவரது குடும்பத்தின் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்தனர்.
நவ. 29: நாராணாபேட்டையில் 4 குற்றவாளிகளும் சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நவ. 30: எப்ஐஆர் பதிவு செய்ய தாமததித்ததாக 3 போலீசார் சஸ்பெண்ட். குற்றவாளிகளை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு. இந்த சம்பவத்தால் ஐதராபாத்தில் பல இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தன. போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது. செர்லபள்ளி மத்திய சிறையில் 4 குற்றவாளிகளும் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டனர்.
டிச. 1: குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கிட, விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டிஷாவின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார்.
டிச. 3: மெகபூப்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
டிச.4: குற்றவாளிகளை 4 நாட்களுக்கு போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
டிச.6: அதிகாலையில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் தப்பிக்க முயன்றனர். அவர்கள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து சுட்டதால், பதிலுக்கு போலீசார் தற்காப்புக்காக நடத்திய என்கவுன்டரில் 4 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர்.

கணவரை கொன்ற இடத்தில் என்னையும் கொல்லுங்கள் குற்றவாளியின் மனைவி கண்ணீர்
சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலுவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அவரது மனைவி ரேணுகா கூறுகையில், ‘‘என் கணவருக்கு எதுவும் ஆகாது. திரும்பி வந்து விடுவார் என்றுதான் கூறிக் கொண்டிருந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று எனக்கு தெரிவில்லை. அவர் இறந்த பிறகு எனக்கு இனி எதுவுமே இல்லை. என் கணவரை கொன்ற இடத்தில் என்னையும் கொண்டு சென்று கொன்று விடுங்கள்’’ என்றார் கண்ணீருடன்.
முகமது ஆரிப்பின் தாயார், ‘என் மகன் இறந்து விட்டான்’ என்பதைத் தவிர அவரால் வேறெதுவும் பேச முடியவில்லை. சிவாவின் தந்தை ராமப்பா கூறுகையில், ‘‘என் மகன் தவறு செய்திருக்கலாம்.

ஆனால் இதுபோன்ற முடிவு இருந்திருக்கக் கூடாது. எவ்வளவோ பேர் பலாத்காரம், கொலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் இவ்வாறு நடத்தப்படவில்லை’’ என்றார். குற்றவாளிகள் 4 பேரின் குடும்பமும் அதிகம் படிக்காத ஏழ்மையான குடும்பம். 4 பேரையும் பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைநிறைய சம்பாதித்த அவர்கள் இஷ்டத்துக்கு செலவு செய்தனர். சிறு வயதிலேயே மது பழக்கத்திற்கும் அடிமை ஆனார் என அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

மலர் தூவி பாராட்டிய பொதுமக்கள்
4 குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், போலீசார் மீது மலர்களை தூவி சபாஸ் போலீஸ் என்று கூறி பாராட்டினர். மேலும் தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது என்பதற்கு தெலங்கானா போலீசார் நல்ல செயல் செய்திருப்பதாகவும் இதனை வரவேற்பதாக தெரிவித்த பொதுமக்கள் `ஜெய் தெலங்கானா போலீஸ்’, `ஜெய் தெலங்கானா அரசு’, `ஜெய் முதல்வர் சந்திரசேகரராவ்’ என்று கோஷங்களை எழுப்பினர்.

பெண் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
வக்கீலும், சமூக ஆர்வலருமான விருந்தா கோவர் தனது பேஸ்புக் பதிவில், ‘‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களுக்கான சம உரிமை என்ற பெயரில் நடக்கும் எல்லையில்லா வன்முறைகள் இவை. ஒவ்வொரு என்கவுன்டர் வழக்கிலும், எப்ஐஆர் பதிவு செய்து சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. எனவே இந்த வழக்கிலும் போலீசார் மீது சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார். பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் தனது பேஸ்புக் பதிவில், ‘‘பெண்களை வைத்து போலி என்கவுன்டர்களை செய்யாதீர்கள்.

நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இது போலியான தண்டனை’’ என்றார். உச்ச நீதிமன்றம் நீதிபதி கருணா நன்டி, ‘‘கொல்லப்பட்ட 4 பேரும் அப்பாவிகளாக கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்? அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இதனால், உண்மையான மிருகங்கள் சுதந்திரமாக கூட உலாவிக் கொண்டிருக்கலாம்’’ என சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

போலீசாருக்கு இனிப்பு ஊட்டி பாராட்டினர்
பெண் டாக்டர் டிஷா கொலை வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்ததற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். மகள்களை பெற்ற பெற்றோர் மட்டும் அல்லாது, மாணவர்கள், மாணவிகள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் ஆகியோரும் போலீசாரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சில இடங்களில் டிஷாவுக்கு அஞ்சலி செலுத்தி ஊர்வலமாக சென்ற மாணவ, மாணவிகள், போலீஸ் கமிஷனர் சஞ்சனார் உருவபடத்திற்கு பாலாபிஷேகம் செய்து தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.தெலங்கானா மாநிலம் முழுவதும் பெண்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். மேலும் கல்லூரி மாணவிகள் சிலர் மேளம் அடித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிஷாவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு
இதற்கிடையே என்கவுன்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் சடலங்களும் ஆம்புலன்ஸ் மூலம் மெகபூப்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மருத்துவ கண்காணிப்பாளர் கிருஷ்ணா தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேரின் சடலங்களும் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. டிஷா வீட்டிற்கு போடப்பட்ட பாதுகாப்பு தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு 3 மாத காலத்துக்கு இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் பெற்றோர், மாணவி டிஷா கொலை குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை வரவேற்றுள்ளனர். நிர்பயாவின் தந்தை அளித்த பேட்டியில், ‘‘எங்களைப் போல், ஐதராபாத் மாணவியின் பெற்றோர் நீதி வேண்டி 7 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. போலீசார் சரியானதை செய்துள்ளனர்’’ என்றார். நிர்பயாவின் தாயார் கூறுகையில், ‘‘இந்த என்கவுன்டரை நடத்திய போலீசார் மீது உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்துகிறேன்’’ என்றார். இதே போல, கதுவாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமியின் தந்தை கூறுகையில், ‘‘எனது மகள் வழக்கில் நீண்ட விசாரணை தொடர்கிறது.

அதில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் விடுதலையாகி விட்டான். இன்னும் விசாரணை தொடர்கிறது. எப்போது தண்டனை வழங்கப்படும் என தெரியவில்லை. ஆனால் ஐதராபாத் மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளது. இனி அவர்கள் நீண்டதொரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமிருக்காது’’ என்றார்.

மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவு
தேசிய மனித உரிமை ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இது மிக கவனமாக விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம். எனவே, ஆணையத்தின் விசாரணை பிரிவு டைரக்டர் ஜெனரல் தலைமையில் குழு உடனடியாக ஐதராபாத் விரைந்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்த விஷயத்தில் தெலங்கானா போலீசார் முன்னெச்சரிக்கையாக இருக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இக்கட்டான சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை. சட்டப்படியான அமைப்புகள் அனைத்தும் ஒரு நபரை கைது செய்யும் போதும், கஸ்டடியில் வைத்துள்ள போதும் மனித உரிமையை ஒருபோதும் மீறக்கூடாது. வாழும் உரிமை, சட்டத்தின் முன் சமம் ஆகியவை மனித உரிமையின் அடிப்படை. அது காக்கப்பட வேண்டும்’’ என கூறி உள்ளது.

நாங்களே எதிர்பார்க்காதது டிஆர்எஸ்  எம்பி வியப்பு
தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்பி கேசவா ராவ் கூறுகையில், ‘‘அரசு தரப்பில் என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நாங்கள் செய்துள்ளோம். வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் தீர்ப்பு வந்து விடும் என்றே நினைத்தோம். ஆனால் இப்படி நடக்குமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 4 குற்றவாளிகளும் கொல்லப்பட்டதை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இந்த தண்டனை நீதிமன்றம் மூலமாக கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட என்கவுன்டர் என்பது உங்களுடைய பார்வையாக இருக்கலாம். அதைப் பற்றியும் அரசு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.Tags : Shanti ,Disha , Daughter's soul, Shanti reaches, Disha's mother
× RELATED குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்...