சைபராபாத் கமிஷனர் விளக்கம் என்கவுன்டர் செய்தது ஏன்?

ஐதராபாத் கால்நடை பெண் டாக்டர் டிஷா கொலை வழக்கில் குற்றவாளிகளாக இருந்த 4 பேரை போலீசார் நேற்று அதிகாலை என்கவுன்டர் செய்தனர். இது குறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஞ்சனார் நிருபர்களிடம் கூறியதாவது:

கால்நடை டாக்டர் டிஷா எரித்துக் கொலை செய்த வழக்கில் எந்தவித தடயமும் கிடைக்காத நிலையில் விசாரணை செய்த சாத்நகர் போலீசார்  தொழில்நுட்ப ரீதியாக தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நாராயணபேட்  மாவட்டம், மக்தல் மண்டலத்தை சேர்ந்த முகமது ஆரிப், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகியோர் திட்டமிட்டு உதவி செய்வது போன்று டிஷாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 30ம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  குற்றவாளிகள் 4 பேரிடமும் விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் 10 நாட்களுக்கு போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து சாத்நகர் நீதிமன்றமும் 3ம் தேதி இரவு 12 மணி முதல் 12ம் தேதி  இரவு 12 மணி வரை அனுமதி வழங்கியது.

இதையடுத்து கடந்த 4ம் தேதி குற்றவாளிகள் 4 பேரையும்  செர்லோபல்லி சிறையில் இருந்து போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது. 4ம் தேதி மற்றும் நேற்றுமுன்தினம் இவர்கள் நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறினர். அதன் அடிப்படையில் நேற்று அதிகாலை 10 பேர் கொண்ட போலீசார் சட்டான்பல்லியில் டிஷா எரித்துக் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆதாரங்களை சேகரிப்பதற்காக குற்றவாளிகள் 4 பேரையும் அழைத்து வரப்பட்டது.

குற்றச் சம்பவம் நடைபெற்ற போது டாக்டர் டிஷாவின் செல்போன் மற்றும் இதர ஆதாரங்களை இந்த பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு முறை வெவ்வேறு விதமாக அவர்கள் கூறிய நிலையில் முகமது ஆரிப் மற்றும் சென்னகேசவலு ஆகியோர் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் வைத்திருந்த 2 துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு துப்பாக்கி சூடு நடத்த முயற்சி செய்தனர். தொடர்ந்து அவர்களை சரணடையும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் நந்திகாமா காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்ஐ வெங்கடேஸ்வரலு,  காவலர் அரவிந்கவுடு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவம் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்கு இடையே நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தபிறகு 4 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 4 பேருக்கும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இதேபோன்று பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அந்தந்த மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகள் விவரங்களையும் சேகரித்து வருகிறோம். இதுகுறித்து ஆழமான விசாரணையும்  செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: