ரயில் நிலையத்தில் அதிக விலைக்கு உணவு விற்றால் உரிமம் ரத்து : நிறுவனங்களுக்கு பயணிகள் நலவாரிய தலைவர் எச்சரிக்கை

சென்னை: ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பயணிகள் நலவாரிய தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் கூறினார்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் பயணிகள் வசதி நல வாரிய தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் மனோஜ் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து ரயில் நிலையங்களில் இருந்த பயணிகளிடம் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போதுமானதாக உள்ளதா என்று கேட்டறிந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும், ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் ரயில் பயணிகள் வசதி நல வாரிய தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆய்வுகள் நடத்தியுள்ளோம். இங்கு ரயில் நிலையங்களில் அவசர சிகிச்சை மருத்துவமனை, கழிப்பறைகள், நடைமேடைகள், பயணிகள் ஓய்வு அறை உள்ளிட்டவைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் குறைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: