×

கைலாசாவில் இருந்து நித்தியானந்தா ஓட்டம்: ஹைதியில் தலைமறைவு: மத்திய அரசு தேடுதல்

புதுடெல்லி: ஈக்வடார் நாட்டில் தனித்தீவை விலைக்கு வாங்கி, ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, அங்கிருந்து ஹைதி நாட்டுக்கு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ‘நித்தியானந்த பீடம்’ என்ற ஆசிரமத்தை நிறுவினார். இதன் கிளைகள் நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலு் உள்ளன. அவர் மீது பாலியல் ரீதியாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. நித்தியானந்தா, முதல் முறையாக கடந்த 2010ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், 53 நாட்கள் சிறையில் இருந்தார். பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பெரும் சர்ச்சைகள் காரணமாக, கர்நாடகாவில் இருந்த பிடதி ஆசிரமம் மூடப்பட்டது. பின்னர், மீண்டும் அவர் ஒரு சில வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்துக்கு அவர் 2 மாணவிகளை கடத்தி சென்றதாக, மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அகமதாபாத்தில் இருந்த அவரது ஆசிரமமும் மூடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். இப்படி பல்வேறு பரபரப்புகளுக்கு இடையில், வழக்கு விசாரணையின்போதே நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் கூறினர். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்்தில் மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில்தான், தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில்  தனித் தீவை விலைக்கு வாங்கி, அங்கு தனி நாடு உருவாக்கி இருப்பதாக நித்தியானந்தாவின் பெயரில் செயல்படும் இணையதளத்தில் பரபரப்பு தகவல் வெளியானது. அந்த நாட்டுக்கு ‘கைலாசா’ என்று பெயரிடப்பட்டது.

அதற்கு எல்லைகள் இல்லை. நித்தியானந்தாவின் உருவம் பதித்த தனிக்கொடி, பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இந்நாட்டை தனி நாடாக அங்கீகரிக்க கோரி, ஐநா.விடமும் விண்ணப்பித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நித்தியானந்தா பற்றி வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக நேற்று தெரிவித்தது. இது குறித்து, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது:  நாங்கள் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டோம். அவர் புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்த விண்ணப்பத்தை போலீசார் சரிபார்த்து ஒப்புதல் தரவில்லை. இதனால் அந்த விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் துறைகள் அனைத்தையும் உஷார்படுத்தி உள்ளோம்.

வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று ஊகம் செய்வது கடினம். இதை கண்டுபிடிப்பது வெளியுறவு அமைச்சகத்தின் ேவலை அல்ல. ஆனால், தப்பி ஓடியவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பிற நாட்டு அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல், நித்தியானந்தாவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என்று ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்நாட்டில் அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கியதாக தகவலையும் அது மறுத்துள்ளது. இது பற்றி ஈக்வடார் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘நித்தியானந்தா சாமியாருக்கு ஈக்வடார் நாடு அடைக்கலம் தர மறுத்து விட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுபோல், தென் அமெரிக்காவில் அவர் எந்த ஒரு இடத்தையும் வாங்குவதற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. ஈக்வடாரில் அவருக்கு அடைக்கலம் தர மறுத்ததை அடுத்து, அவர் ஹைதிக்கு அடைக்கலம் கேட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளது.

‘என்னை யாரும் தொட முடியாது’
நித்தியானந்தா சமீபத்திய வெளியிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி அவர் உரையாற்றுகிறார். அதில் அவர், ‘‘என்னை யாரும் தொடக் கூட முடியாது. என்னை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. உண்மையை நிருபிப்பதன் மூலம் என்னுடைய ஒருமைப்பாட்டை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அப்போது உண்மை எது என்பது உங்களுக்கு தெரியும். நான் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரம சிவன். புரிந்ததா? எந்த முட்டாள் நீதிமன்றமும் உண்மைய அறிய என்னை விசாரிக்க முடியாது. ஏனென்றால், நானே பரம சிவன்,” என்று பேசியுள்ளார்.

கொடியில் தமிழ்
நித்தியானந்தாவின் ‘கைலாசா’ இணையதளத்தில் முக்கோண வடிவத்தில் கொடி, மற்றும் சின்னம் உள்ளது. கொடியில் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகள் உள்ளன. இந்த இணையதளம், ஒரு நாட்டிற்கு இருக்கும் அனைத்து துறைகளும் கொண்டதாக இருக்கிறது. உள்துறை, பாதுகாப்பு, வர்த்தகம், கரூவூலம், வீட்டுவசதி, தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் உருவாக்கி ஒரு நாகரீகமான நாடாக காட்சி அளிக்கும் விதத்தில் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மொழிகளாக தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Central Government Search ,Haiti , Kailasa, Nityananda Flow, Haiti, Hideout, Central Government
× RELATED ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால்...