×

ரேஷனில் அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம்: புதுவை அரசு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவையில் சிவப்பு, மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக அவரவரின் வங்கிக் கணக்கில் பணம் வழங்க முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்துள்ளார். புதுவையில் சிவப்பு, மஞ்சள் நிற ரேசன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான இத்திட்டத்தில் அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கும் பல்வேறு முட்டுக்கட்டை போடப்பட்டன.  மேலும், அரிசிக்கு பதிலாக பணத்தை வழங்க வேண்டுமென அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கட்சிகளின் எம்எல்ஏக்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தநிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

புதுவை மாநிலத்தில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் முறையே 20 கிலோ மற்றும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசு உறுதியாக உள்ளது. எனினும் இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டுமென்ற ஒருசிலரின் தவறான முடிவின் காரணமாக இதற்கான கோப்பு மத்திய உள்துறையின் ஆய்வில் உள்ளது.  எனவே மத்திய உள்துறை இந்த விவகாரத்தில் தன் முடிவை அறிவிக்கும் வரை சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கு, அதாவது ஏப்ரல்-2019 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான காலத்திற்கு அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த சிவப்பு அட்டைதாரர்களுக்கு ₹3,000 மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,500 வழங்குவதற்கான குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் கையெழுத்திட்டு அனுப்பிய கோப்புக்கு கடந்த 5ம் தேதி அன்று முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அவரவர்களின் வங்கிக் கணக்கில் நேரிடையாக பணம் செலுத்தப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் கூட்டத்துக்கு அதிகாரிகள் செல்ல நாராயணசாமி தடை
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு நாள் என்பதால் அவரது படத்துக்கு நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், ‘கவர்னர் கிரண்பேடி இந்த அரசு செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே செயல்பட்டு கொண்டுள்ளார். அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடும் அதிகாரத்தை கவர்னருக்கு யார் கொடுத்தது? தலைமை செயலர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்வர், அமைச்சர்களின் உத்தரவை கேட்டுத்தான் செயல்பட வேண்டும். கவர்னரின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லையென நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி அதிகாரிகளுக்கு  ஒரு உத்தரவு அனுப்பியுள்ளேன்’ என்று கூறினார்.



Tags : Ration in ration, money in bank account, new government
× RELATED ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு...