மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் இரண்டாவது அபாய காம்பவுண்ட் சுவர் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமம் ஏ.டி. காலனியில் ஜவுளிக்கடை அதிபருக்கு ெசாந்தமான காம்பவுண்ட் சுவர் கடந்த 2ம்தேதி இடிந்து, அருகில் உள்ள 3 வீடுகள் மீது விழுந்து அமுக்கியது. இதில்17  பேர் பலியாகினர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை உருவாக்கியது.  உயிர்ப்பலிக்கு காரணமான காம்பவுண்ட் சுவரின் மிச்சம் மீதி பகுதியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட கருங்கல் காம்பவுண்ட் சுவர் முற்றிலும் இடிக்கப்பட்டது. இதேபோல், இதன் அருகிலேயே சுமார் 200 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட இன்னொரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் உள்ளது.

இதனருகில் 12 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் மீது இந்த சுவரும் சரிந்து விழும் நிலையில் இருப்பதால் இவற்றையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இந்த சுவரை யும் இடிக்க, இரு ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு வந்தனர். சில அடி தூரம் மட்டுமே காம்பவுண்ட் சுவரை இடிக்க முடிந்தது. மீதமுள்ள இடத்துக்குள் ஜே.சி.பி இயந்திரம் நுழைய முடியவில்லை. மீறி நுழைந்தாலும், அருகில் உள்ள வீடுகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. இதனால், இடிப்பு பணியை தற்காலிகமாக கைவிட்டனர்.

Related Stories: