×

குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் நிலம் 3 அடி உள்வாங்கியது

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் நிலம் 3 அடி அளவுக்கு உள்வாங்கியுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து வந்த கன மழையால் தண்டவாளங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 20 நாட்கள் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடந்தது. இதையடுத்து, கடந்த 30ம் தேதி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. அன்று மாலை மீண்டும் கன மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வரும் 8ம் தேதி வரை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.   தற்போது, மலை ரயில் பாதையில் கே.என்.ஆர் பகுதியில் 20 மீட்டர் நீளத்தில் 3 அடி அளவுக்கு பூமி உள்வாங்கியுள்ளது. இதனால் தண்டவாளம் பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் நிற்கிறது. மேலும் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் இதை சீரமைத்து மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 காட்டு யானைகள்: குன்னூர் பகுதிகளில் பெய்த கன மழையால் அனைத்து இடங்களும் பச்சை பசேல் என்று செழித்து காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு யானை கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புதர்கள் நிறைந்து காணப்படுவதால் 5 யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். யானைகளை புகைப்படங்கள் எடுக்கவோ அவற்றை கூச்சலிட்டு துன்புறுத்தவோ கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Tags : land ,rail line ,Kunnur - Mettupalayam , Coonoor, Mettupalayam, Mountain Railway
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!