9 மாவட்டம் தவிர உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தவித தடையும் இல்லை என்றும், 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சி தேர்தல் முழுக்க, முழுக்க தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். அதில் முழுமையாக ஈடுபட்டு, நாங்கள் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம்.  கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

 உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கையை எடுப்பது தேர்தல் ஆணையம்தான், அரசு அல்ல. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். நீதிமன்ற உத்தரவு இன்றுதான் வந்துள்ளது. இன்றைக்கு எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். கூட்டணி கட்சிகளுடன் பேசி எந்தெந்த வார்டு யார், யாருக்கு என்பது முடிவு செய்த பின்னர்தான், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Related Stories: