புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 40 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது: ஒருவாரத்தில் 4 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது

சென்னை: புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 40 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு இருந்தால் மட்டுமே சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். இந்த ஏரிகளை நம்பித் தான் சென்னையில் வாழும் மக்கள் குடிநீரை எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த ஏரிகள் வறட்சியை தொடும் காலக்கட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் சென்னை மக்களை வாட்டி வதைத்துவிடும். அதுவும் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு சென்னை மக்கள் குடிநீர் பஞ்சத்தை சந்தித்தனர். ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் தவியாய் தவித்தனர். இதனால் சென்னை குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடுகளின் மூலம் கிடைத்த தண்ணீரை லாரிகள் மூலம் மக்களுக்கு பகிர்ந்தளித்து சமாளித்தனர்.

மாற்று வழிகள் என்பது கல்குவாரி தண்ணீர், பயன்பாடற்று கிடந்த ஏரி தண்ணீர் உள்ளிட்டவைகளை சுத்திகரித்தும், ரயில்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்தும், விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தும் சமாளித்தனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் மழைநீரை சேமிக்க வழியில்லாமல் கடலுக்கு சென்று வீணாகி வருகிறது. தண்ணீரை சேமிப்பது என்பது இரண்டாம் கட்ட திட்டமாக இருந்தாலும், முதல்கட்டமாக சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இந்த ஏரிகளுக்கு மழை நீர் செல்ல முடியாமல் வீணாக கடலுக்கு செல்கிறது என்பது தான் உண்மை.

 அந்த அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாய்கள் அனைத்தையும் ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிவிட்டனர். இந்த சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி எதிர்பார்த்தை விட அதிகமாக பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் நீர்நிலைகள் அனைத்து ஏறக்குறைய நிரம்பி வழியத் தொடங்கிவிட்டது. ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கியதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 120 ஏரிகள் நிரம்பி உபரி நீர் கடலை நோக்கி சென்று வீணானது. கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழையால் கிடைத்த மழைநீர் ஏறக்குறைய 4 டிஎம்சி அளவுக்கு கடலுக்கு சென்று வீணாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குடியிருப்புகளில் தேங்கி கிடக்கும் தண்ணீர் இன்னும் வடியாததால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி கிடக்கிறது. ஆனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில், இவ்வளவு மழை பெய்தும் 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

 அதாவது, 3231 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,572 மில்லியன் கனஅடியும், 1,081 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட சோழவரம் ஏரியில் 243 மில்லியன் கனஅடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரியில் 1,936 மில்லியன் கனஅடியும், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,142 மில்லியன் கனஅடியும் நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11,257 மில்லியன் கனஅடியில் 4,893 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது 40 சதவீதம் மட்டும் நீர் நிரம்பியுள்ளது.

 தற்போது பெய்துள்ள மழைநீரை வைத்து தான் வரும் கோடை காலத்தை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே, கிடைக்கின்ற மழைநீரை இந்த ஏரிகளில் சேமித்து வைத்தால் மட்டுமே கோடை கால தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க முடியும். இதற்காக ஒரு புதிய திட்டத்தை வகுத்து தமிழக அரசு, கிடைக்கின்ற மழைநீரை இந்த ஏரிகளில் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சென்னை மக்களின் கோடை கால தண்ணீர் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: