அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததால், தேதி குறிப்பிடாமல் நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார். அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர்மேன், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டேர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர்.

Advertising
Advertising

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என அனைவரும் சாட்சிகளிடம் விசாரணையை கடந்த ஜனவரி மாதம் தொடங்கினர். அதில், அரசு தரப்பு சாட்சியாக 36 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 120 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இதை வைத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 11 மாதங்களாக நடந்து வந்தது. இந்தநிலையில், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, இருதரப்பு வாதங்கள் என அனைத்தும் நேற்று முடிவடைந்தது. பின்னர், போக்சோ வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த வழக்கில், 17 பேரில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனை தொடர்ந்து மற்ற 16 பேரும் சிறையிலையே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: