புதுமொழியால் தமிழ் வளர்ச்சி தடைபடாது இந்தி ஆதரவாளராக மாறுகிறாரா அமைச்சர் பாண்டியராஜன்?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு திருவேற்காட்டில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அமைச்சர் மாபா. பாண்டியராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பிறகு அவர் அளித்த பேட்டி: தினந்தோறும் அதிமுகவில் பல பேர் இணைந்து வருகிறார்கள். கட்சியில் இணைவது குறித்த முயற்சிகளை தீபாதான் எடுக்கவேண்டும். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து இணையும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறி இருந்தார்கள். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஒரு இந்திய மொழி, ஒரு அயலக மொழி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது

2014ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவு. இதனால் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என முதல்வர் கூறியுள்ளார்.

இதை தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம் என தங்கம் தென்னரசுவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மொழி வெறுப்பு அரசியல் வைத்து அரசியல் செய்தால் அதனை தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதுமொழியை கற்றுக் கொள்வதாலும் தமிழ் வளர்ச்சி தடைபடும் என்ற அபத்தமான கருத்து தங்கம் தென்னரசுவுக்கு இருக்காது என நினைக்கிறேன். அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு திமுகவும் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். இந்தி கற்றுக்கொள்ள தமிழ் வளர்ச்சித்துறை நிதி ஒதுக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை மூலமே தமிழை அழிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும், இந்தி ஆதரவாளராக அமைச்சர் பாண்டியராஜன் மாறி வருகிறாரா என்ற கருத்து தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

Related Stories: