ஆட்டோமொபைல் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை காலி : உதிரிபாக உற்பத்தியாளர்கள் கவலை

புதுடெல்லி: ஆட்டோமொபைல் துறையில் 4 மாதங்களில் ஒரு லட்சம் பேரின் வேலை பறிபோனதாக ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறை அதிக பாதிப்பை அடைந்துள்ளது. விற்பனை குறைந்ததால் உற்பத்தி நிறுவனம் மற்றும் டீலர் ஷோரூம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். வாகன விற்பனை சரிந்ததால் உதிரி பாக உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர் சங்கம் தலைவர் தீபக் ஜெயின் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல்  முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை 10.1 சதவீதம் குறைந்து 1.79 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 1.99 லட்சம் கோடியாக இருந்தது. மந்த நிலையால் 200 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி 2.7 சதவீதம் மட்டுமே உயர்ந்து 51,397 கோடியாக உள்ளது. உதிரிபாக இறக்குமதி 6.7 சதவீதம் சரிந்து 57,574 கோடியாக உள்ளது. கடந்த ஓராண்டாகவே விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகன உற்பத்தியை 20 சதவீதம் வரை குறைத்துள்ளனர். இதனால், உதிரிபாக உற்பத்தி 50 சதவீதமாக சரிந்து விட்டது. எனவே இந்த ஆண்டில் கடந்த ஜூலை வரை மட்டும் உதிரிபாக உற்பத்தி துறையில் ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றார்.

Related Stories:

>