மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் சென்னையில் தீபாவளியன்று எத்தனை கண்காணிப்பு கருவி பொருத்தியிருந்தது?

சென்னை: தீபாவளியன்று, மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் சென்னையில் எத்தனை இடத்தில் கண்காணிப்பு கருவியை பொருத்தி இருந்தது என்று மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் பேசியதாவது: மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் தீபாவளி காலத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டறிய சென்னையின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியிருந்ததா, அவ்வாறெனில், எந்தெந்த இடங்களில் எத்தனை கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக பசுமை வெடிகளின் பயன்பாட்டை உறுதி செய்யவும், அதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் இருப்பதற்கும், அதேநேரத்தில் உள்நாட்டுப் பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில்  எத்தகை நடவடிக்கைகள் இந்த அரசு மேற்கொண்டுள்ளது? இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் ேபசுகையில், “மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தீபாவளி நேரத்தில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்வதற்கென, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்றின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகளை சென்னையில் நான்கு இடங்களில் பொருத்தியிருந்தது (திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், சவுகார்பேட்டை, தியாகராய நகர்)  இது வழக்கமாகப் பொருத்தப்பட்டுள்ள தொடர் கண்காணிப்புக் கருவிகளை விட கூடுதலாகும். இவற்றில் மூன்று இடங்களில் மாசு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டிருந்தது. பசுமைப் பட்டாசுகள் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மாசுப் பொருட்கள் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாகவே வெளிப்படும். லித்தியம், ஆர்சீனிக், பேரியம் மற்றும் ஈயம் போன்ற உலோகங்கள் பசுமைப் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுவதில்லை என்றார்

Related Stories: