சபரிமலை ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலையை உயர்த்த தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: ‘சபரிமலையில் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை உயர்த்த உத்தரவிட முடியாது,’ என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில்   பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்காக கடந்த 16ம்   தேதி நடை திறந்து பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இளம் பெண்கள் தரிசனத்துக்கு சென்றதால் ஏற்பட்ட பதற்றத்தால்   பக்தர்களின் வருகை குறைந்தது. இந்த ஆண்டு அமைதியான சூழல்  நிலவுவதால்  பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை  செல்லும் வழியில் நிலக்கல், பம்பை,  சன்னிதானம் உள்பட பல்வேறு பகுதிகளில்  ஓட்டல்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு  வருகின்றன பம்பையில் இருந்து  சன்னிதானம் செல்லும் வழியில்  ஏராளமான ஓட்டல்கள், கடைகள் உள்ளன. இங்கு விற்கப்படும் உணவு  பொருட்களின்  விலை ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு பொருட்களை  விற்கக் கூடாது என தேவசம் போர்டு  உத்தரவிட்டுள்ளது. சில கடைகளில்  கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக   புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, கேரள உணவு பாதுகாப்பு துறை,  தேவசம் போர்டு  அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி கூடுதல் விலைக்கு  பொருட்கள் விற்கும்  கடைகள்,  ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து  வருகின்றனர்.  இந்நிலையில்,  ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள்  சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்து நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘கடைகள்,  ஓட்டல்கள் ஏலம் விடுவதற்கு முன்பே  விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த  விலைக்கு விற்கப்படும் என்று உறுதி  அளித்த பின்னர்தான் கடைகள் ஏலம் விடப்பட்டது. எனவே,  உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த  அனுமதிக்க முடியாது,’ என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories: