மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ஊழலில் இருந்து அஜித்பவார் விடுவிப்பு : பாஜ காட்டிய பாசமா?

நாக்பூர்: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், விதர்பா நீர்பாசன ஊழல் வழக்குகள் அனைத்திலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், கடந்த 1999-2009 காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நீர்பாசன துறை அமைச்சராக இருந்தார். அப்போது, நீர்பாசன துறையில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 2012ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளைபிறப்பித்த உத்தரவுப்படி, இந்த ஊழல் குறித்து போலீசார் விசாரித்து  வந்தனர். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு அஜித் பவார் எம்எல்ஏ ஆனார்.  பின்னர், திடீரென பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்த அவர்,  பாஜ தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக பதவியேற்றார்.  ஆனால், பெரும்பான்மை இல்லாததால் முதல்வராக பொறுப்பேற்ற பட்நவிசும், அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர்.  அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றதுமே, அவர் மீதான 9 ஊழல் வழக்குகளை முடித்து வைக்க பட்நவிஸ் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாஜ அரசு விலகியதை  தொடர்ந்து, இம்மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் -  தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதில், தேசியவாத காங்கிரசில் பலம் வாய்ந்த அஜித் பவாருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், , அவர் மீதான விதர்பா நீர்பாசன ஊழல் வழக்குகள் அனைத்தம் முடித்து வைத்து உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘நீர்பாசன முறைகேடுகளில் அஜித் பவாருக்கு எந்த தொடர்பும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. சிவசேனா கூட்டணி அரசு கடந்த 28ம் தேதி பொறுப்பேற்ற நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இந்த அறிக்கையை போலீசார் அளித்துள்ளனர்.அதனால், இது பட்நவிஸ் முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவமாக கருதப்படுகிறது.

Related Stories: