வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் இறக்குமதி வெங்காயம் ஜனவரி 20ல் வருகிறது : மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ‘`வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் 20ம் தேதி இந்தியா வருகிறது,’’ என மாநிலங்களவையில் உணவுத் துறை இணையமைச்சர் தான்வே அறிவித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய உணவுத்துறை இணையமைச்சர் தான்வே ராவ் சாேகப் தடராவ் பேசியதாவது; வெங்காயம் பயிர்கள் சேதமடைய, தாமதமாகவும் தொடர்ந்து பெய்த மழையுமே காரணம். இதனால், அரசு இருப்பு வைத்துள்ளதில் இருந்து வெங்காயம் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அரசு வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் கப்பலில் ஜனவரி 20ம் தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்து உற்பத்தியை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் 60 சதவீத உணவு எண்ணெய் தேவை இறக்குமதி மூலமும், 40 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலமும் நிறைவேற்றப்படுகிறது.

`ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ ஒரே மாநிலத்துக்குள் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 மாநிலங்களுக்கு இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்., தற்போது 12 மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளன. ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை நாடெங்கும் வரும் ஜூன் 1 ம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணி நிமித்தமாக இடம் பெயர்ந்துள்ளோர், தினக்கூலி தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். இந்த  அட்டையை பயன்படுத்தி நாடெங்கும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் தகுதியுள்ள பயனாளிகள் பொருட்களை வாங்கலாம். இதில், போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பதை சோதனை செய்வதற்கான இயந்திரங்கள் ரேஷன் கடைகளில் நிறுவப்பட்டுள்ளன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் மூலம் 75 கோடி பேர் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: