பாபர் மசூதி இடிப்பு தினம் நாடு முழுவதும் அமைதி நிலவியது : அயோத்தியில் பூஜைகள் நடந்தன

அயோத்தி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது நினைவு தினமான நேற்று, நாடு முழுவதும் அமைதி நிலவியது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடெங்கும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால், கடந்த ஆண்டுகளில் வழக்கமாக நிலவி வந்த பதற்றம் இந்தாண்டு காணப்படவில்லை. நாடு முழுவதும் அமைதி நிலவியது. மேலும், ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியிலும் 4 மண்டலங்களாக பிரித்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.   இதனால், அயோத்தியில் இயல்புநிலை நிலை காணப்பட்டது..  பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்கு சென்றனர். கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.

இது தொடர்பாக ஹனுமன்கர்கி கோயில் தலைமை பூசாரி ராஜூ தாஸ் கூறுகையில், `‘இன்றைய தினத்தை நல்லுறவை வளர்க்கும் தினமாக கடைப்பிடிக்கிறோம். ’ என தெரிவித்தார். அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு துக்கமான நாள்தான்,’’ என்றனர். முகமது ஷாசத் ரெய்ன் என்பவர் கூறுகையில், ‘‘அயோத்தியில் வசிக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே எந்த பிரச்னையும் இல்லை அமைதியாகவே வா்ழ்கிறோம்,’’ என்றார்.

Related Stories: