முந்தைய அரசுகள் போல் வாக்குறுதி அரசியல் நடத்தாமல் செயல்படுத்தும் அரசியலை நோக்கி நாட்டை அழைத்துச் செல்கிறோம் : பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘முந்தைய அரசுகள் போல் வாக்குறுதி அரசியல் நடத்தாமல், செயல்படுத்தும் அரசியலை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறோம்,’’ என பிரதமர் பேசினார். பிரபல ஆங்கிலப் பத்திரிகை நேற்று நடத்திய தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் அமைதியின்மை நிலவும் என கூறப்பட்டது. ஆனால், அது தவறு என்பதை மக்கள் நிரூபித்து விட்டனர். அண்டை நாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மத ரீதியிலான அச்சுறுத்தலை சந்தித்துள்ளனர். இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ள அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு, சிறந்த எதிர்காலம் உறுதி செய்யப்படும். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, அரசியல்ரீதியாக மிகவும் சிக்கலான விஷயமாக தோன்றலாம். ஆனால், அது காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தற்போது முழு நம்பிக்கையுடன் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது நடுத்தர மக்களின் வருமானத்துடன் நேரடி தொடர்புடையது. நேர்மையான தொழில் செய்பவர்களிடம் எந்த கேள்வியையும் அரசு கேட்காது. முன்பு, வங்கிகள் தேசிய மயமாக்கபட்டபோது, அது கொண்டாடப்பட்டது. எங்கள் அரசு, தைரியமாக வங்கிகளை இணைத்து மறுமுதலீட்டுக்கு உதவியது. முந்தைய அரசுகள் போல் இல்லாமல், நாங்கள் வாக்குறுதி அரசியலை பின்பற்றவில்லை. அதற்கு பதிலாக, செயல்படுத்தும் அரசியலை நோக்கி நாங்கள் நாட்டை கொண்டு செல்கிறோம். நாங்கள் நாட்டை முன்னேற்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு டிஸ்மிஸ்

கடந்த மக்களவை தேர்தலின் போது உ.பியில் வாரணாசி மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட மனு செய்தவர் தேஜ் பகதூர் யாதவ். இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர். டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரவை இவர் சமர்ப்பிக்காததால், இவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இவர், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு, நீதிபதி மனோஜ் குப்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் மோடி சார்பில் ஆஜரான வக்கீல் சத்யபால் ஜெயின் வாதிடுகையில், ‘‘தேர்தல் வெற்றிக்கு எதிரான மனுவில் எந்த காரணமும் கூறப்படவில்லை. முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அதனால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல,’’ என கூறினார். இதையடுத்து, மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

Related Stories: