மக்களவையில் புயலை கிளப்பிய காங்கிரஸ் எம்பிக்கள் நாட்டில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள் : ஸ்மிருதி இரானி அதிர்ச்சி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை மக்களவையில் காங்கிரஸ் எம்பி.க்கள் எழுப்பினார்கள். இதனால், பெரும் அமளி ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 பேர் கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 2 வாலிபர்கள், சில தினங்களுக்கு ஜாமீனில் வெளியே வந்தனர். நேற்று முன்தினம் அந்த அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர்.  டெல்லி மருத்துவமனையில் அப்பெண் கலைக்கிடமாக இருக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மக்களவையில்  கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எழுப்பியது காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், , ‘‘ ஒரு பக்கம் ராமர் கோயிலை கட்டுவதற்காக திட்டமிடுகிறார்கள். ஒரு பக்கம் சீதாவை தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றப் போவதாக பேச்சுக்கள் உள்ளது. ஆனால், இது அக்கிரமத்தின் நிலமாக மாறி வருகிறது, என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது மற்றும் கொலை சம்பவங்களை மத ரீதியாக்கப்படுவதும், அரசியல் ஆக்கப்படுவதும் துரதிஷ்டவசமானது. . பெண்ைண தீ வைத்து எரிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த அவையில் யாரும் அதனை மதரீதியான விவகாரமாக்க வேண்டாம், என்றார். அப்போது, காங்கிரஸ் எம்பி டிஎன் பிரதாபன், தீன் குரியகோசே ஆகியோர் இருக்கையில் இருந்து எழுந்து, ஸ்மிருதி இரானியை நோக்கி முழக்கமிட்டபடி ஓடி வந்தனர். அவர்களின் செயலுக்கு பாஜ உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருவரும் ஸ்மிருதி இரானியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இந்த விவகாரம் மக்களவையில் பூதாகரமான நிலையில், சம்பந்தப்பட்ட காங்கிரஸ் எம்பி.க்கள் இருவரும் வெளியே சென்ற பிறகு அவைக்கு திரும்பவில்லை.  மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மக்களவை மீண்டும் கூடியதும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், காங்கிரஸ் எம்பி.க்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருக்கும்போது அவரை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் ஓடி வந்தனர்.

அவர் ஒரு பெண் உறுப்பினர். இது தேவையற்ற நடவடிக்கையாகும். தங்கள் செயலுக்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றார்.

அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த மீனாக்‌ஷி லேகி, காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பார்த்து, ‘‘உங்கள் கட்சி எம்பி.க்களை அவைக்கு வந்து மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள், என்றார். ஆனால், காங்கிரஸ் எம்பி.க்கள் இதை ஏற்கவில்லை. பாஜ எம்பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த அமளியால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவையில் பேசியது தவறா?

மக்களவையில் நடந்த அமளிக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே  அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பேட்டியில், காங்கிரஸ் எம்பி.க்கள் என்னை அச்சுறுத்தும் வகையில் ஓடி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒருவர், ‘நீங்கள் ஏன் அவையில் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டார். நான் அவையில் இருக்கும் பாஜ பெண் எம்பி. நான் அவையில் பேசியது தவறா? என்றார்.

Related Stories: