நாடாளுமன்ற துளிகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10% பேருக்கு மனநல பிரச்னை

மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் கூறுகையில், ‘‘பெங்களூரில் உள்ள தேசிய மனநல மருத்துவ மையம் மூலம் கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும், தேசிய மனநல கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 10.6 சதவீதம் பேர் மனநல பிரச்னையில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 12 மாநிலங்களில், மணிப்பூர் தவிர பிற இடங்களில்  குறைந்தது ஒரு மனநல மருத்துவமனை உள்ளது. எல்லா மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொதுநல மருத்துவமனைகளில் மனநலப் பிரிவுகள் உள்ளன. சிலவற்றில் போதை மறுவாழ்வு ைமையங்களும் உள்ளன.  பெரிய மருத்துவமனைகள் தவிர 450 நடமாடும் மனநல சிகிச்சைப்பிரிவுகளும், 249 போதை மறுவாழ்வு மையங்களும் உள்ளன. 41 மனநல மருத்துவமனைகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் நடத்தப்படுகின்றன.’’ என்றார்.

அமைச்சரை கண்டித்த சபாநாயகர்

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ தனது இருக்கையை விட்டு எழுந்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் ஜவடேகர் பதில் அளிக்கும் நேரம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘கேள்வி நேரத்தில் பேசாதீர்கள்,’’ என அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

புயல் பாதித்த மாநிலங்களுக்கு சலுகை

மக்களவையில் பிஜூ ஜனதா தள எம்.பி சஸ்மித் பத்ரா பேசுகையில்,‘‘ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அடிக்கடி புயல் பாதிப்புக்கு ஆளாகின்றன. சிறப்பு அந்தஸ்து மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களுக்கு 90% நிதியை மத்திய அரசு வழங்குகிறது. அதுபோல், புயல் பாதிப்பு மாநிலங்களுக்கு மத்திய அரசு சலுகை வழங்க வேண்டும்,’’ என்றார்.

காந்தி பற்றி தவறான தகவல் விசாரணை நடத்த கோரிக்கை

மத்தியப் பிரதேச பள்ளி பாடப் புத்தகத்தில் மகாத்மா காந்தியை குடிகாரர், மோசமானவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் மாநிலங்களவையில் நேற்று எதிரொலித்தது. இது குறித்து பூஜ்ய நேரத்தில் பேசிய ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், ‘‘பள்ளி பாடப்புத்தகத்தில் காந்தியை பற்றி மிக மோசமாக குறிப்பிட்டுள்ளது அவமானம். இது குறித்து விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இஸ்ரேலில் மது பாட்டிலில் காந்தி படம் இடம் பெற்றுள்ளது. அவரை கொன்றவர்கள் போற்றப்படுகின்றனர்,’’ என்றார்.

முதன்முறையாக ஒலித்த சந்தாலி

மாநிலங்களவையில், பிஜூ ஜனதா தள எம்.பி சரோஜினி ஹெம்பிரம் சந்தாலி மொழியில் பேசினார். இது ஒடிசா பழங்குடி மக்கள் பேசும் மொழி. முதல் முறையாக இந்த மொழி மாநிலங்களவையில் நேற்று ஒலித்தது. சந்தாலி மொழிக்கான எழுத்துக்களை பண்டிட் ரகுநாத் முர்மு என்பவர் கடந்த 1925ம் ஆண்டு உருவாக்கினார். இவரது பங்களிப்பை மாநில அரசு ஏற்கனவே அங்கீகரித்துள்ளதால், தற்போது மத்திய அரசும் அங்கீகரித்து பண்டிட் முர்முவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என சரோஜினி வேண்டுகோள் விடுத்தார்.

காற்று மாசுவால் வாழ்நாள் குறையுமா?

மக்களவையில் கேள்வி நேரத்தில் காற்று மாசு பிரச்னை குறித்து பேசிய உறுப்பினர் ஒருவர், ‘‘மாசு காரணமாக மக்கள் வாழ்நாள் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன,’’ என்றார்.  இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜவடேகர், ‘‘மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம். காற்று மாசுவுக்கு வாழ்நாள் குறைவுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த இந்திய ஆய்வும் கூறவில்லை. காற்று மாசு உள்ள 102 நகரங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு காற்று மாசு பிரச்னையை சமாளிக்க தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

Related Stories: