மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை மசோதாவை தோற்கடிக்க மம்தா முடிவு : எம்பி.க்களுக்கு கொறடா உத்தரவு

கொல்கத்தா: குடியுரிமை திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதாவை  நாடாளுமன்றத்தில் தோற்கடிக மம்தா முடிவு செய்துள்ளார். அண்டை நாடுகளான  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில்  இருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சீகள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, குடியுரிமை திருத்த மசோதாவையும்.  நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவையும் நாளை மறுதினம் மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவும், தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதாவும் அரசியலமைப்பு கொள்கைகளுக்கு எதிரானது. இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில், மத அடிப்படையில் ஒருபோதும் குடியுரிமையை வழங்கக் கூடாது. அதே நேரம்,  மதம், ஜாதியை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதாக இருந்தால், இந்த மசோதாவை நான் ஆதரிப்பேன்.

குடியுரிமை திருத்த மசோதாவை பாஜ நிறைவேற்றலாம். உங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், கடைசி வரை எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை தோற்கடிக்கும் முயற்சியில் மம்தா இறங்கியுள்ளார். இதற்காக, அடுத்த நான்கு நாட்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: