×

உபி.யில் பலாத்காரத்தால் பாதித்த இளம்பெண்ணை அடித்து, கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரிப்பு : கொடூர வாலிபர்கள் வெறித்தனம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண்ணை, அந்த கும்பல் முதலில் சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தி, பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். நேற்று முன்தினம் காலை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு இளம்பெண் சென்றபோது, ஜாமீனில் வந்த 2 பேரும், அவர்களின் கூட்டாளிகளும் அந்த பெண்ணை வழமறித்து தாக்கி தீ வைத்து விட்டு தப்பினர். இதில், அப்பெண் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். ஐதராபாத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த இளம்பெண் நீதிமன்றத்துக்கு சென்றபோது நடுவழியில் நடந்த கொடூரம் பற்றி, புதிய தகவல் வெளியாகி உள்ளது. அப்பெண் சாலையில் சென்றபோது வழிமறித்த வாலிபர்கள், அவரை முதலில் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். வலி தாங்காமல் அந்த பெண் அலறி துடித்துள்ளார். இதை அவ்வழியே சென்ற மக்கள் சிலரும் பார்த்து, அச்சத்தில் விலகி சென்றுள்ளனர். பின்னர், அந்த பெண்ணை கத்தியால் குத்திய கும்பல், ஈவு இரக்கமின்றி கதற கதற பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த சாட்சிகளின் மூலம் இப்போது இது தெரிய வந்துள்ளது.

கவலைக்கிடம்

காயமடைந்த இளம்பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி டாக்டர்கள் கூறுகையில், ‘‘பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்,” என்றார்.

வழக்கை வாபஸ் பெற கூறி குடும்பத்தினருக்கு மிரட்டல்

இளம்பெண் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக 5 போலீஸ் உயரதிகாரிகள் கொண்ட குழுவை, மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், வழக்கை வாபஸ் பெறும்படி இப்பெண்ணின் குடும்பத்தினரை அடையாளம் தெரியாத கும்பல்கள் மிரட்டி வருவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

Tags : UP , up raped, beaten, stabbed, gasoline:
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...