ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் என் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம்: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு பிறகு தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். மாணவி தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் குற்றம் சாட்டிய ஐஐடி மூன்று பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. பிறகு மாணவி பயன்படுத்திய செல்போன், லேப்டாப், ஐ-பேட் தடயவில் துறையில் ஆய்வுக்கு அனுப்பட்டது. ஆய்வில் மாணவி செல்போனில் இருந்த பதிவு தற்கொலைக்கு முன்பு பதிவானதாக தெரியவந்தது. இதற்கிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசார் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் மற்றும் அவரது இளையமகள் ஆயிஷாவை நேற்று விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்டது. அதன்படி நேற்று அப்துல் லத்தீப் தனது இளைய மகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி முன்பு ஆஜராகவி விளக்கம் அளித்தனர்.

அதைதொடர்ந்து மாணவி பாத்திமா லத்தீப் தந்தை அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகளின்  மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் விசாரணைக்கு பிறகு எழுந்துள்ளது. அதில் எனது மகள் மரணம் அடைந்தவுடன் கோட்டூர்புரம்  போலீசார் விசாரணையில் பல்வேறு குறைகள் உள்ளது. மூன்று பேராசிரியர்கள் மற்றும் 7 மாணவர்கள்  தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் கோட்டூர்புரம் போலீசார் முறையாக விசாரணை  நடத்தவில்லை. எனது மகள் இறந்த அன்று ஐஐடி வளாகத்தில்  பிறந்தநாள் விழா நடந்துள்ளது. அதன்படி விசாரணை  நடத்தப்படவில்லை. கோட்டூர்புரம் போலீசார்  விசாரணையின் படி பார்த்தால், எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தால் நாக்கும்  கண்ணும் வெளியே வந்து இருக்கும். அதுபோன்று அறிகுறிகள் எதுவும் இல்லை. எந்த ஒரு நிகழ்வையும் எழுதி வைத்து பெயரைக் குறிப்பிடும்  தனது மகள், தனது இறப்பிற்கு காரணமானவர்கள் பற்றி எழுதிய கடிதம் கண்டிப்பாக  இருக்கும். அதை போலீசார் கண்டுபிடிக்கவில்லை.  

எனது மகளின் உடலில் வேறு ஏதேனும் மருந்து செலுத்தப்பட்டு உள்ளதா என  போலீசார் பிரேத பரிசோதனையின் போது ஆய்வு செய்யவில்லை. விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. மகளின்  பிரேதப் பரிசோதனையும் வீடியோ பதிவு செய்யப்படவில்லை. இதனால் எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் உள்ளது.  இந்த 13 சந்தேகங்களையும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம்  தெரிவித்துள்ளேன். எனது மகள் வழக்கு மிகவும்  சிக்கலாக உள்ளதால் உறுதியான ஆதாரங்களோடு தொடர்புடைய நபர்களை பிடிக்க  விசாரணை நடத்தி வருவதாக,  கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி  தெரிவித்துள்ளார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐஐடி இயக்குநருக்கு மிரட்டல் கடிதம்

ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பெயருக்கு நேற்று பெயர் குறிப்பிடாமல் மிரட்டல் கடிதம் ஒன்று அவருடைய அலுவலகத்திற்கு வந்தது. அப்போது அந்த கடிதத்தில் ஐஐடி மாணவி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையென்றால் எங்களால் பொருத்துக்கொள்ள முடியாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த கடிதத்துடன் நேற்று ஐஐடி இயக்குநர் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம கடிதத்தை எழுதி அனுப்பியது யார் என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: