வேகமாக பரவும் கொசு உற்பத்தி டெங்கு காய்ச்சலுக்கு ஐடி ஊழியர் பலி: கொடுங்கையூரில் பரபரப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் காலி இடங்கள் மற்றும் ரயில்வே இடங்களில் தேங்கி உள்ள தண்ணீர் கொசு உற்பத்தி ஜெட் வேகத்தில் இருக்கிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு கொடூங்கையூரில் ஒருவர் இறந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வடசென்னையின் நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. குறைந்த பட்சம் இரண்டு வீட்டில் ஒருவராவது காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சக்திவேல் (34), இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும், 3 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன.

சக்திவேல் தரமணியில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். ஒரு வாரத்துக்கு முன்பு சக்திவேல் காய்ச்சலுக்காக எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சக்திவேலுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  ஐந்து நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  உயிரிழந்தார். ஏற்கனவே மண்டலம் 4க்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் இந்த மழைக்காலத்தில் மட்டும் பல உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த அக்டோபர் 2ம் தேதி வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த பிரேம்குமார் ஜீவிதா தம்பதியின் மகன் சாய் தர்ஷன் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். தொடர்ந்து நவம்பர் 7ம் தேதி பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா என்பவரின் 8 வயது மகன் ஜெனோபர் லில்லி மர்ம காய்ச்சலால் இறந்தார்.

நவம்பர் 13ம் தேதி கொடுங்கையூர் சின்னாண்டிமடம்  கடும்பாடி அம்மன் கோயில் நான்காவது தெருவைச் சேர்ந்த காளிமுத்து -இந்திரா தேவியின் 5 வயது மகள் கனிஷ்கா மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மேலும் கொடுங்கையூர் பகுதியில்  குப்பை மேடு அருகே வாழும் மக்கள் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். கொசுக்களை ஒழிக்க வேண்டும் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: