×

தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளுக்கு 300 கிலோ எடையில் பணப்பெட்டி: மார்ச் மாதத்திற்குள் நிறுவப்படும்

* டாஸ்மாக் உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக 3,000 டாஸ்மாக் கடைகளுக்கு 300 கிலோ எடைகொண்ட பணப்பெட்டிகளை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதில் டாஸ்மாக் முக்கிய இடம் வகிக்கிறது. இக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 கோடி வரை மது விற்பனையாகிறது. எனினும் விற்பனை அதிகமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் பணத்தை வைக்கும் பெட்டிகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்து வந்தனர். இதனால், இதுேபான்ற பணப்பெட்டிகளை மாற்றித்தர மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாவட்டம்தோறும் அதிகாரிகள் கடந்த 2 மாதமாக கணக்கெடுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். இதேபோல், அதிக கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களையும் கணக்கிட்டு வந்தனர். அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு 300 கிலோ எடைகொண்ட இரும்பினால் ஆன பணப்பெட்டியை டாஸ்மாக் நிர்வாகம் அமைக்க உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் தான் பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் அதிகம் நடக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் எந்தநேரமும் காவல்துறை ரோந்து அதிகமாக இருப்பதால் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடைபெறுவது இல்லை. எனவே, அந்த கடைகளில் உள்ள பணப்பெட்டியை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு பணப்பெட்டிகள் நிறுவப்பட உள்ளது. இந்த பணப்பெட்டிகள் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்டது. இதற்கான டெண்டர் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் டெமோ பார்க்கப்படும். 2020 மார்ச் மாதத்திற்குள் குறிப்பிட்ட 3 ஆயிரம் கடைகளிலும் பணப்பெட்டிகள் முழுமையாக நிறுவப்பட்டுவிடும். அதன் பின்னர் அடுத்தகட்டமாக மாநகராட்சி பகுதிகளில் பாதுகாப்பற்ற கடைகள் கண்டறியப்பட்டு அங்கு பணப்பெட்டிகளை நிறுவும் பணி தொடங்கும்.
இவ்வாறு கூறினார்.

Tags : task shops ,Tamil Nadu ,nadu , Tamil Nadu, Task Shop, Cash Box
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...