பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற 4 குற்றவாளிகளும் சுட்டுக்கொலை: ஐதராபாத் அருகே அதிகாலையில் போலீஸ் என்கவுன்டர்

ஐதராபாத்: ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேர் நேற்று அதிகாலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள செம்ஷாபாத்தை சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் டிஷா இவர், கடந்த 28ம் தேதி தொண்டேபல்லி சோதனைச்சாவடி அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு மாதப்பூர் சென்று மீண்டும் சோதனை சாவடி அருகே வந்தார்.  அப்போது நாராயணபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ஆரிப், கிளீனர்கள் சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் திட்டமிட்டு டிஷாவின் மொபட்டை பஞ்சர் செய்தனர். பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து அவரை கடத்திச்சென்று வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சுயநினைவு இழந்த பெண் டாக்டரை சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள சட்டான்பல்லி என்ற இடத்திற்கு லாரியில் கடத்திச்சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் அவரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக முகமது ஆரிப் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் நடுரோட்டில் வைத்து என்கவுன்டர் செய்ய வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு மகளிர் அமைப்பினர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளின் தாய்மார்களும் தவறு நடந்திருந்தால் அவர்களை கொன்றுவிடலாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

குற்றவாளிகளிடம் விசாரிப்பதற்காக தெலங்கானா மாநில அரசு விரைவு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி குற்றவாளிகளிடம் விசாரணை தொடங்கியது. கடந்த 4ம் தேதி  குற்றவாளிகள் 4 பேரையும் விசாரிப்பதற்காக 7 நாட்கள் காவலில் எடுத்தனர் போலீசார். வழக்கு விசாரணையை விரைவில் முடித்து விரைவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர தெலங்கானா மாநில காவல்துறை ஆணையாளர் சஞ்சனார் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார்.  இதற்காக துணை ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தடயவியல் ஆய்வக நிபுணர்கள் இணைந்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் ஆதாரமாக நான்கு பேரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியாக போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

சட்டான்பல்லி மேம்பாலம்கீழ் பெண் டாக்டர் உடலை எரித்த இடத்தின் அருகில் தங்க கொலுசு, ஜீன்ஸ் பேண்ட் கிழிந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்து சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.  மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் 500 மீட்டர் தொலைவில் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை போலீசார் நேற்று  முன்தினம் மீட்டனர். இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிகளில் போலீசார் 4 குற்றவாளிகளையும் அழைத்து வந்து விசாரிக்க முயன்றனர். ஆனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பல்வேறு அமைப்பினர், 4 குற்றவாளிகளையும் கடுமையாக தாக்குவதற்கு தயாராக இருந்த காரணத்தால் போலீசார் சற்று தயக்கம் காட்டி வந்தனர்.  குறிப்பாக 4 குற்றவாளிகளும் வைக்கப்பட்டிருந்த சாத்நகர் காவல் நிலையத்தை தினசரி  ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டும், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தியும் தங்கள் கோபத்தை காட்டினர்.

குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு போலீசார் மட்டன் பிரியாணி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து போலீசாருக்கு எதிரான முழக்கமிட்டனர். ஒவ்வொரு முறையும் 4 குற்றவாளிகளையும் பகலில் விசாரணைக்கு அழைத்து செல்ல முயலும்போது, பல்வேறு அமைப்பினர் இடையூறு செய்து, உடனே தூக்கில் போடும்படி கோஷமிட்டு வந்தனர்.  இதனால் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அதன்படி காவல்துறை ஆணையாளர் சஞ்சனார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு 4  குற்றவாளிகளையும், சம்பவம் நடந்த சட்டன்பல்லி மேம்பாலம் அருகே பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். விவரங்களை வீடியோவில் பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கவும் 2 தனிப்படையினர் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில் டிஷா எரித்து ெகால்லப்பட்ட இடத்திற்கு வந்த பிறகு குற்றவாளிகள் 4 பேரும் போலீசார் மீது திடீரென சரமாரி கற்களை வீசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.  போலீசார் சுதாரிப்பதற்குள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனராம். இதனால்   தற்காப்புக்காக காவல்துறை ஆணையாளர் சஞ்சனார் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் சம்பவ இடத்திலேயே சிவா, நவீன் ஆகியோர் உயிரிழந்தனர். குண்டு காயமடைந்த சென்னகேசவலு,  முகமது ஆரிப் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தில் ஏற்றியபோது உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  

பெண் டாக்டர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர் என நாடு முழுவதும் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துவந்த நிலையில் போலீசார் அதனை சிறப்பாக செய்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் துணிவான முயற்சியை மேற்கொண்ட போலீசாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரெண்டிங்

தெலங்கானா போலீசாரின் என்கவுன்டர் விவகாரம் டிவிட்டரில் நேற்று இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் டிரெண்டிங் ஆனது. இச்சம்பவம் குறித்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே 4 லட்சம் டிவிட்கள் போடப்பட்டன. #justiceforDisha, #encounter, # Hyderabadhorror என்ற பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகின. மேலும், தெலங்கானா போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரை பாராட்டி #Thankyousajjanar என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. ‘‘2008ல் வாரங்கலில் இளம்பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்தியவர்களை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளியது போல, 2019ல் ஐதராபாத் டிஷா வழக்கிலும் குற்றவாளிகளை சுட்டுத்தள்ளி ஒரே புல்லட்டில் நீதி வழங்கிய சஜ்ஜனாருக்கு நன்றி’’ என பலர் வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயம் #humanrights என்ற ஹேஷ்டேக்கில் சிலர் மனித உரிமை பற்றியும் பேசினர். அதுகூட போலீசாரின் என்கவுன்டரை நியாயப்படுத்தியே இருந்தது. ‘

‘தீவிரவாதிகள், மாவோக்களை நீதி விசாரணையின்றி சுட்டுத் தள்ளும் போது பலாத்காரம் செய்தவர்களை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும். மனித உரிமைகள் மனிதர்களுக்கே, மனித மிருகங்களுக்கு அல்ல’’ என்ற கருத்துகளை பதிவு செய்திருந்தனர். மேலும், #EncounternNirbhaya என்ற ஹேஷ்டேக்கில் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை பெற்றுள்ள 4 குற்றவாளிகளையும் இதே போல என்கவுன்டரில் சுட்டுத்தள்ள வேண்டும் என சிலர் பதிவிட்டுள்ளனர். டிவிட்டர் மட்டுமின்றி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்திலும் இவ்விவகாரம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.

ஆதரவும்...

மாயாவதி (பகுஜன் சமாஜ்): ஐதராபாத் போலீசின் நடவடிக்கை விலைமதிப்பில்லாதது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தில் அல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற குற்றங்கள் தினந்தோறும் நடக்கின்றன. இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. ஆனால் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகிறார்கள். இங்கு காட்டாட்சி நடக்கிறது. உத்தரப்பிரதேச மாநில போலீசாரும், டெல்லி போலீசாரும் ஐதராபாத்தை போலீசை பார்த்து பாடம் கற்க வேண்டும். அவர்கள் மாற வேண்டும்.

ராஜ்யவர்தன் ரதோர் (பாஜ எம்பி): ஐதராபாத் போலீசாருக்கும், அவர்களை வழிநடத்திய தலைமைக்கும் எனது பாராட்டுக்கள். தீயவற்றின் கை ஓங்கும் போது அதை நல்ல சக்திகள் தடுக்கும் என்பதை அனைவரும் அறிந்துள்ள நாடு இது.

மீனாட்சி லேகி (பாஜ எம்பி): துப்பாக்கியை ஏதோ காட்சிப் பொருளாக போலீசார் வைத்திருக்கக் கூடாது. குற்றவாளிகள் தப்பிக்க முயற்சிக்கும் போது அதை பயன்படுத்த வேண்டும்.

ஜெயா பச்சன் (சமாஜ்வாடி தலைவர்): நடக்காமலே இருப்பதற்கு பதிலாக, தாமதமாகவாவது நல்லது நடந்துள்ளதே.

விஜய் ரூபானி (குஜராத் பாஜ முதல்வர்): கொடூரமான குற்றத்திற்கு எதிராக மக்கள் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த என்கவுன்டர். மனிதாபிமானபில்லாத குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற உணர்வு ஓங்கியிருக்கிறது.

எடியூரப்பா (கர்நாடகா முதல்வர்): குற்றவாளிகள் தப்பிக்க முயன்றதாலும், போலீசை தாக்க முயன்றதாலும் தற்காப்புக்காக நடத்தப்பட்டுள்ள என்கவுன்டர் இது.

சஞ்சய் நிருபம் (காங். தலைவர்): என்கவுன்டரில் 4 பேரை சுட்டுக் கொன்றது சட்டப்படி தவறு என்றாலும், இந்த நேரத்தில் தேவையான ஒன்று. ஐதராபாத் போலீசாருக்கு வாழ்த்துக்கள். மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இச்சம்பவம் மூலம் ஒரு வலுவான செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பும்...!

ப.சிதம்பரம் (காங். மூத்த தலைவர்): அங்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியாது. ஆனால் என்ன நடந்திருந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டியது. அது உண்மையான என்கவுன்டர் தானா அல்லது வேறேதும் காரணமா என்பது நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்.

சசிதரூர் (காங்கிரஸ் மூத்த தலைவர்):  கொள்கைக்காக இதை ஏற்கலாம். ஆனால் இதைப் பற்றி மேலும் தகவல்கள் தேவை.  போலீசாரின் செயலலை நியாயப்படுத்த கூடுதல் தகவல் வேண்டும். அதற்குள்  அவசரப்பட்டு கண்டனம் தெரிவிக்கக் கூடாது. ஆனாலும், சட்டத்தை பின்பற்றும்  சமூகத்தில் சட்டவிரோத கொலைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

மேனகா காந்தி  (பாஜ தலைவர்): நாட்டில் என்ன நடக்கிறது? உங்கள் இஷ்டத்திற்கு யாரையும்  கொல்ல முடியாது. யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது.  எப்படியாவது, நீதிமன்றம் மூலமாகத்தான் அந்த குற்றவாளிகள்  தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

நவாப் மாலிக் (தேசியவாத காங்.): இது நீதி கொடுக்கும் சரியான வழியல்ல. இதுபோன்ற முறையில் நீதி வழங்கப்படக் கூடாது.

நீலம் கோர்ஹி (சிவசேனா): இதை ஒரு சதியாகத்தான் பார்க்கிறேன். குற்றவாளிகள் சட்டப்படியே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ரேகா ஷர்மா (தேசிய மகளிர் ஆணைய  தலைவர்): குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென கருதினோம். அது  நீதிமன்றம் மூலமாக இருந்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையில் போலீசார்  சுட்டார்கள் என தெரியவில்லை. போலீஸ் தான் உண்மையை சொல்ல வேண்டும். அல்லது  விசாரணைக்கு பின் உண்மை தெரியவரும்.

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி தலைவர்):  சட்டத்திலிருந்து விலகி ஓடுபவர்கள்... நீதியிலிருந்து எவ்வளவு தூரம் விலகி  ஓட முடியும். ஒருவருக்கு நீதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  ஆனாலும், நமது மகள்கள், சகோதரிகளுக்கு எதிராக எந்த ஒரு கொடூர குற்றமும்  நடக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கையும், சமூக சூழலும் ஏற்படுத்தும் போது  தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.

கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்):  பாலியல் பலாத்கார வழக்குகள் விரைவாக வெளிச்சத்துக்கு வருகின்றன. அது,  உன்னாவ் அல்லது ஐதராபாத் என எந்த சம்பவமாக இருந்தாலும், மக்கள் கடும்  கோபமடைகின்றனர். அதனால், என்கவுன்டர் நடக்கும் போது மகிழ்ச்சியை  வெளிப்படுத்துகின்றனர். ஆனாலும் இதில் கவலைப்பட வேண்டிய விசயம், நீதித்துறை  மீதான நம்பிக்கையை மக்கள் இழந்திருப்பதை காட்டுவதுதான். எனவே, கிரிமினல்  நீதித்துறை அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அனைத்து மாநில  அரசுகளும் இணைந்து எடுக்க வேண்டும்.

சர்மிஷ்தா முகர்ஜி (முன்னாள்  ஜனாதிபதி பிரணாப்பின் மகள்): மக்களின் கோபம், அழுத்தத்திற்காக இப்படிப்பட்ட  சட்டவிரோத கொலை செய்யும் நடவடிக்கையை அரசு எடுத்திருந்தால், அது  நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்.

பூபேஷ் பாகேல்  (சட்டீஸ்கர் முதல்வர்): குற்றவாளிகள் தப்பிக்க முயன்றால், அவர்களை  சுடுவதைத் தவிர போலீசுக்கு வேறு வழியில்லை. அதற்காக இந்த வழக்கில் நியாயம்  கிடைத்து விட்டது என கூறிவிட முடியாது.

நடிகர், நடிகைகள் பாராட்டு:

ஐதராபாத்தில்  சில தினங்களுக்கு முன் பெண் டாக்டர் ஒருவர் கடத்தி பலாத்காரம் செய்து  எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இது தொடர்பாக லாரி டிரைவர் முகமது ஆரிப், சென்ன கேசவன்,  கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேர்களை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில் நேற்று காலை சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்கள் அழைத்துச்  செல்லப்பட்டனர். அங்கிருந்த நால்வரும் தப்பி செல்ல முயன்றபோது அவர்களை  போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நடிகர், நடிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

விஷால்: முடிவில் நீதி வழங்கப்பட்டது. தெலங்கானா போலீசாருக்கு எனது நன்றி.

நாகார்ஜுனா: இன்று காலை எழுந்தபோது நீதி வழங்கப்பட்டதை அறிந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவேக்:  தங்கையின் ஆத்மா சாந்தியடையும். இதுபோன்ற எண்ணம் கொண்டோருக்கு  இதுவொரு  பாடமாக அமையும். போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சல்யூட்.

அல்லு அர்ஜுன்: நீதி வழங்கப்பட்டது. போலீசாருக்கு பாராட்டுகள்.

நானி: நகரத்துக்கு ஒரு ரவுடி தேவை அந்த ரவுடி போலீசாக இருக்க வேண்டும்.

ஜூனியர் என்டிஆர்: நீதி வழங்கப்பட்டது. சகோதரியின் ஆன்மா சாந்தி அடையட்டும்

சமந்தா: தெலங்கானா போலீசாரை நேசிக்கிறேன். பயம்தான் பெரிய தீர்வு. சில சமயம் அது ஒன்றுதான் தீர்வு.

ரகுல்  ப்ரீத் சிங்: பலாத்காரம் போன்ற குற்றங்களை செய்துவிட்டு எவ்வளவு தூரம்தான்  நீங்கள் (குற்றவாளிகள்) ஓடிவிட முடியும். நீதி கிடைத்தது.  தெலங்கானா போலீஸின் என்கவுன்டருக்கு நன்றி. இவ்வாறு கூறி உள்ளனர்.

கொல்லும் எண்ணம் வரவில்லை:

ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து, நிர்பயா கொலை குற்றவாளிகளையும் சுட்டுக் கொல்ல வேண்டுமென்ற கருத்துகளை பலர் கூறி வருகின்றனர். இது குறித்து, நிர்பயா வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ் முன்னாள் கமிஷனரான நீரஜ் குமார் கூறுகையில், ‘‘அந்த சமயத்தில் எங்களுக்கு நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால் கொல்ல வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்கு வரவில்லை. பசி கொண்ட சிங்கங்களின் முன் குற்றவாளிகளை தூக்கி வீச வேண்டுமென பலர் கூறினர். ஆனால் நாங்கள் சட்டத்தை மதித்து அதன்படி நடந்தோம்’’ என்றார்.

Related Stories: