×

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம். மாநில செயலாளர்): உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் மூலம் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை முறையான சட்டவிதிகளை நிறைவேற்றாமல் அலங்கோலமாக அறிவித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையில், அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிமுக அரசின் எடுபிடியாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துமா என்கிற மக்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, தேர்தல் ஆணையம் இதற்கு பிறகாவது, அதிமுக அரசுக்கு அடிபணிந்து செயல்படுவதை கைவிட்டு, முறையான, சட்டப்படியான விதிமுறைகள்படி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

இரா.முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் “சட்ட நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்து தேர்தல் தேதிகள் அறிவிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியிருந்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வழங்கவேண்டிய ஆவணங்கள், படிவங்கள் முறையாகவும், முழுமையாகவும் இதுவரை வழங்கப்படவில்லை. நேரில் சென்று கேட்கும் போதும் பொறுப்பான பதில் கூறும் அலுவலர்களும் இல்லாத அவலம் மாநில தேர்தல் ஆணையத்தில் நிலவுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அதிகாரம் பெற்று இயங்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளில் சந்தேகத்தின் நிழல் விழாதபடி விலகி நின்று, சுயேச்சையாக செயல்பட்டு, சுதந்திரமான நியாயமான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்): மாநில தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த குழப்பத்தின் மறு உருவமாக மாறியுள்ளது. ஏதாவது சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டி தேர்தலை தள்ளிப்போடுவதிலேயெ தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியிருப்பதாக தெரிகிறது. இது உண்மையான ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு அல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவில் கூட 4 மாதத்திற்குள் 9 மாவட்டங்களுக்கும் மறுவரையறை செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, இடஒதுக்கீடும் எந்த வகையிலும் பாதிக்காதவாறு, எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்காதவாறு முழுக்க, முழுக்க சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும். இனி எந்த காரணத்திற்காகவும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட கூடாது.


Tags : government ,Supreme Court ,AIADMK ,party ,leaders ,elections , Local elections, AIADMK government, Supreme Court, political party leaders
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்