×

அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் திடீர் பேச்சு: பாமக, பாஜக, தேமுதிக, தமாகா நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 1,18,974 ஊரக உள்ளாட்சிகளுக்கான பதவியிடங்களுக்கு வருகிற 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 31 மாவட்டங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்களுடன் கூட்டணி கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் முறையாக வார்டு வரையறை செய்யப்படவில்லை என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ததுடன், 9 மாவட்டங்களில் வார்டு வரையறை முறையாக செய்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் நேற்று மாலை 4.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், தமாகா சார்பில் ஞானதேசிகன், கோவை தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது, போட்டியிட விரும்பும் இடங்கள் குறித்து மாவட்ட வாரியான பட்டியலை முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். கூட்டணி கட்சிகள் அளித்த பட்டியலை அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் வழங்கப்பட்டு, அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்

தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? கூட்டணி கட்சி நிர்வாகிகள் கருத்து
அதிமுக தலைமையுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:  பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜ): அதிமுக தலைமையிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு,  இடம் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது  என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளோம். நேரடி மற்றும் முறைமுக  தேர்தலில் நல்லது எதுவோ அதை எடுத்து கூறி இருக்கிறோம் என்றார்.ஜி.கே.மணி  (பாமக): அதிமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதியை பகிர்ந்து கொள்வது என்பது  குறித்து ஆலோசனை செய்தோம். இதுகுறித்து ராமதாஸ் மற்றும்  அன்புமணியுடன் ஆலோசனை செய்து எங்கள் முடிவை தெரிவிப்போம்.

அழகாபுரம்  மோகன்ராஜ் (தேமுதிக): இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து  எதுவும் பேசவில்லை. தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்பது குறித்துதான்  பேசினோம். அதிமுக தலைமை கூறிய தகவல்களை விஜயகாந்திடம் கூறி, அடுத்தக்கட்ட  பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்றார். ஞானதேசிகன் (தமாகா):  முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் வார்டு  வாரியாக நடைபெறும் என்பதால் மாவட்ட ரீதியாக அதிமுக பொறுப்பாளர்களுடன்  உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

Tags : talks ,AIADMK ,coalition parties ,headquarters ,BJP , AIADMK Headquarters, Local Elections, MPK, BJP, TMD and TMCA Executives
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...