×

கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை: அதிக இடங்களில் போட்டியிட முடிவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அதிக இடங்களில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்கு பிறகு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக, தமாகா நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சென்னையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்தினர். தனித்தனியாக நடைபெற்ற இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு, அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை, கட்சி தலைமை ஏற்றுக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், ஊரக உள்ளாட்சிகளில் அதிக இடங்களில் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுவது குறித்தும் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் பேசிய முதல்வர், “கூட்டணி கட்சிகளுக்கு சீட் வழங்குவது குறித்து கட்சி தலைமை இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும். எந்த முடிவானாலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்” என்றார்.

Tags : district secretaries ,consultation ,AIADMK ,OPS ,places ,Coalition Parties , Alliance Party, AIADMK District Secretaries, EPS, OPS
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...