திருவண்ணாமலை தீபத் திருவிழா: துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு வழங்கப்படும்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தி.மலை: திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபதிருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வருவதை ஊக்குவிக்க, பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7ம் நாளான நாளை(சனி) பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது.

பக்தர்கள் கொண்டு வரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அதை அப்புறப்படுத்தும் பணியும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழா காலத்தில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், பொதுமக்கள் பிளாஸ்டிக் கேரிபைகளுக்கு மாற்றாக துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை கார்த்திகை மகா தீப திருவிழாவின் போது பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கார்த்திகை திருவிழாவிற்கு துணிப்பை,

சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை எடுத்துவரும் பொதுமக்களுக்கு, குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வருவோரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்களும், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: