பெரும்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்: மலைகிராம மக்கள் பீதி

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளால் மலைக்கிராம மக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே தடியன்குடிசை, கும்மம்மாள்பட்டி, மருமலை, சேம்பிலிஊத்து, நடுப்பட்டி, மன்றவயல், கே.சி.பட்டி, கவியக்காடு, கானல்காடு உட்பட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் காபி, மலை வாழை, மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, சவ்சவ் போன்றவைகளை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக பெரும்பாறை அருகே மன்றவயல், சேம்பிலியூத்து போன்ற மலைக்கிராமங்களை ஒட்டிய பகுதியில் காட்டுயானைகள்  முகாமிட்டுள்ளன. இதனால் இந்த பகுதி வழியாக மலைத்தோட்டங்களுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதியில் நிலவும் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் காட்டுயானைகள் வனப்பகுதிகளை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருவதை தடுக்க வனத்துறையினர் வனப்பகுதிகளில் குடிநீர் குட்டைகளை நிறுவி காட்டு விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: