×

மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்கப்படுகிறதா?... திருச்சியில் வீடு வீடாக ஆணையர் ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் வீடுகளில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்குகிறார்களா என ஆணையர் சிவசுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். திருச்சி மாநகராட்சி கோ­-அபிசேகபுரம் கோட்டம் தில்லைநகர் சாஸ்த்திரி ரோடு, ஹவுசிங் யூனிட் பகுதி, கீரக்கொல்லை தெரு, டாக்கர்ரோடு, காளையன்தெரு ஆகிய பகுதிகளில் பொது மக்களால் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதையும், வீடுகளில் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் அமைப்பு ஏற்படுத்தியதையும் ஆணையர் சிவசுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆணையர் கூறியதாவது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 214 சிறிய வாகனங்களைக் கொண்டு வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பைகள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனை மேலும் செம்மையாக செயல்படுத்திட, எத்தனை வீடுகளில் பொது மக்களால் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிறது, வீட்டிலேயே உரமாக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என கணக்கெடுக்கவும், இது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், பொது மக்களின் குறைகளை கேட்டறியும் பொருட்டும் முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் ஒவ்வொரு வாகனத்துடன் ஒரு மாநகராட்சி மற்றும் அலுவலர் பணியாளர் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வார்டுகளிலும் இப்பணி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இன்று மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 6 மணி முதல் மாநகராட்சி சிறிய வாகனத்துடன் சென்று, குப்பைகளை வீடுகளிலேயே பிரித்து வழங்கப்படுகிறதா, பிளாஸ்டிக் தடை ஆகியனவற்றை ஆய்வு செய்தனர்.

இதன்படி இன்று கணக்கெடுக்கப்பட்ட 74,900 வீடுகளில் 53,059 வீடுகளில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை பிரித்தே வழங்கினர். குப்பைகளை பிரிக்காமல் வழங்கிய வீடுகளிலுள்ள பொதுமக்கள் நாளை முதல் பிரித்து வழங்குவதாக தெரிவித்தனர். இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

Tags : Biological, Non-Trash, Trichy, Commissioner Inspection
× RELATED 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்:...