திண்டுக்கல் அருகே பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு

தேனி: திண்டுக்கல் அருகே நரசிங்காபுரத்தில் 5 பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டம், போடி சிபிஏ கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் மாணிக்கராஜ், கருப்பசாமி, மாணவர் ராம்குமார், நெல்லூர் கள்ளர் அரசு பள்ளி வரலாற்றுத் துறை ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்காபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள புனல்காடு, பிணக்காடு, கோம்பைத்தொழு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது பெருங்கற்காலத்தை சேர்ந்த ஐந்து கல் பதுக்கைகள் எனப்படும் கல்லறைகள் கண்டறியப்பட்டன. இது குறித்து வரலாற்றுத் துறை பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: கல் பதுக்கை என்பது மலைசார்ந்த இடங்களின் அடிவாரப் பகுதிகளில் தரையின் கீழ்பகுதியில் சதுரம் அல்லது செவ்வக வடிவில் குழி தோண்டி அமைக்கப்படும் பெருங்கற்கால மக்களின் கல்லறையாகும்.

கோம்பைக்காடு பகுதியில் ஐந்து கல் பதுக்கைகள் காணப்படுகின்றன. இதில் ஒரு கல்லறையில் குறுக்குச்சுவர் போன்று பலகை பிரிக்கப்பட்டுள்ளது. இக்கல்பதுக்கையில் இறந்த மனிதனின் எலும்புகளை, தாழிகளில் வைத்தும் இவற்றுடன் ஈமப்படையல் பொருள்கள் வைத்து புதைத்திருக்கலாம். நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கல்பதுக்கை, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது இனக்குழு சண்டையில் இறந்த வீரர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்லறையின் மையப்பகுதியில் இருந்து 10 மீட்டர் சுற்றளவில் உருண்டையான கற்களைக் கொண்டு வட்டமாக கல்வட்டத்தில் உள்ளது போன்று வைக்கப்பட்டுள்ளது. இறந்த ஆன்மாவை வழிபட்டால் குழுவின் இன விருத்திக்கும், வேட்டைத் தொழிலுக்கும் ஆன்மா துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் பெருங்கற்கால மக்கள் வணங்கி வழிபட்டுள்ளனர்.

இத்தகைய பண்பாடு பின்னர் கர்நாடக பகுதிகளுக்கு பரவியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இத்தகைய பெருங்கற்கால கல்லறைகள் கால வரையறை என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலமான கி.மு 500 முதல் கி.பி 500 வரையிலான காலகட்டத்தில் உள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: