பேரையூர் பகுதியில் தொடர் மழையால் சோளம் விளைச்சல் பாதிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதியில் தொடர் மழையால் சோளம் விளைச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், பேரையூர், டி.கல்லுப்பட்டி, பெரியபூலாம்பட்டி மற்றும் மத்தக்கரை பகுதிகளில் விவசாயிகள் பருவமழையை நம்பி மானாவாரி நிலங்களில் கோவில்பட்டிநெட்டை வெள்ளைச்சோளத்தை அதிகளவில் விதைப்பு செய்தனர். கதிர் விட்டு சோளம் அறுவடை பருவத்திற்கு வந்தபோது புழு தாக்கியது. மேலும் இப்பகுதியில் பெய்தும் வரும் தொடர் சாரல் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சோளம் நிறம் மாறி கருப்பு நிறத்தில் உள்ளது.

இதுகுறித்து பெரியபூலாம்பட்டி விவசாயி கணேசன் கூறுகையில், ‘ சோளம் விதைப்பு செய்து இந்த முறை முற்றிலும் நஷ்டமாகி விட்டது. விளையாத பயிர்களை அறுவடை செய்தால் அறுத்த கூலி கூட கட்டுபடியாகாது. வெள்ளைச்சோளம் கருப்பாக மாறி விட்டது. கதிர் பறியும் நேரத்தில் பெய்த சாரல் மழையால் எல்லாம் பாழாகி விட்டது. ஒன்று காய்ந்து கெடுக்கிறது. இல்லையென்றால் மழை பெய்து கெடுக்கிறது. பாதிப்பை வேளாண் அலுவலர்கள் பார்வையிடக்கூட வருவதில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் காப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: