கனிமவள கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் வீணாகும் அவலம்

*ஏலம் விட வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வள கடத்தலில் ஈடுபட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நீண்ட காலமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனங்களை ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனிமவளம் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள், கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளிநாட்டிற்கு கிரானைட் கற்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், அரசு அனுமதியுடன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கிரானைட் கற்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், பலர் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அனுமதியின்றியும் கிரானைட் கற்களை கடத்திச் செல்கின்றனர். அவ்வாறு கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்த வாகனங்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

 பிடிபடும் வாகனங்களின் உரிமையாளர்கள் சிலர், உரிய அபராதத்தை கோர்ட்டில் செலுத்தி விட்டு, தங்கள் வாகனங்களை மீட்டு செல்கின்றனர்.

பலர் வாகனங்களை அப்படியே விட்டு விடுகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கன்டெய்னர், மினி லாரி என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் முட்புதர் மண்டி, வாகனங்கள் மண்ணோடு மண்ணாகி துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள கடத்தல் வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் மீட்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால், இங்குள்ள லாரி மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் பேட்டரி, டயர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். எனவே, காலக்கெடு முடிந்த வாகனங்களை, கோர்ட் உத்தரவுப்படி ஏலத்தில் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும். யாருக்கும் பயனின்றி வாகனங்கள் துருப்பிடித்து, வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேப்பன ஹள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராள மான  வாகனங்கள் பயனற்று கிடக்கிறது. இதனையும் ஏலத்தில் விட வேண்டும் என்றனர்.

Related Stories: