ஜெயங்கொண்டம் பகுதியில் தொடர்ந்து கிணறுகள் உள்வாங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

ஜெயங்கொண்டம் : ஜெங்கொண்டம் பகுதியில் தொடர்ந்து கிணறுகள் உள்வாங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரவு நேரத்தில் வீட்டில் படுத்து தூங்க அச்சமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள குமிழியம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி பொது மக்கள் பயன்படுத்திவந்த அரசாங்க கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நேற்று 2 கிணறுகள் உள்வாங்கியதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள விளந்தை ஊராட்சியில் புது தேவாங்கர் தெருவில் வசிப்பவர் சங்கர். இவர் கடந்த மாதம் புதிதாக வீடு கட்டியிருந்தார். இந்த வீட்டின் பின்புறம் பழைய வீடு இருக்கும்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறு ஒன்று இருந்தது. இதன் மூலம் கிணற்றில் மோட்டார் வைத்து வீட்டுக்கு மேல் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்து வீட்டிற்காக குடிநீராகவும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் பின்புறம் கட்டிடம் இடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. வீட்டின் வாசலில் உள்ளே நின்று சங்கர், டார்ச்லைட்டை அடித்து பார்த்தபோது பின்புறம் இருந்த கிணற்றை காணவில்லை. அருகே செல்லாமல் பெரிய குழியாக தென்பட்டதால் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என இருந்தார்.

பின்னர் விடிந்ததும் சென்று பார்த்தபோது கிணறு 10 அடி ஆழத்திற்கு மேல் பூமிக்குள் சென்று இருந்தது. மேலும் கிணற்றை சுற்றி வைத்திருந்த தண்ணீர் இறைக்கும் பாத்திரங்களும் உள்ளே விழுந்து கிடந்தன. வீட்டிலுள்ள அனைவரும் கிணற்றுக்கு அருகில் செல்லாமல் அச்சத்தி்ல் இருந்தனர். இது தொடர்பாக ஆண்டிமடம் தாசில்தார் குமரையாவிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இவரது வீட்டின் சற்று அருகில் வசிக்கும் இளங்கோவன் என்பவரது வீட்டிலும் இதுபோன்று சுமார் 30 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட கிணறு இடிந்து பூமிக்குள் சென்றுவிட்டது. இது குறித்தும் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தெரிந்த தாசில்தார் குமரையா மற்றும் உடையார்பாளையம் ஆர்டிஓ பூங்கோதை கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் உள்வாங்கிய கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3இடங்களில் கிணறுகள் உள்வாங்கியுள்ளது. இது எதனால் நடக்கிறது என அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அவர்கள் வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். என்னமாதிரி நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என தெரிவிக்கவில்லை. இதனால் இரவு நேரத்தில் கிணறு உள்வாங்கியது போல், வீடுகளும் உள்வாங்கினால் என்ன செய்யமுடியும். இதனால் எங்களுக்கு தூக்கம் என்பதே இல்லை என்று அச்சத்துடன் தெரிவித்தனர்.

Related Stories: