4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை : போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தியதாக சைபராபாத் காவல் ஆணையர் பேட்டி

ஹைதராபாத் : போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தியதாக சைபராபாத் மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து சைபராபாத் மாநகர காவல் ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

Advertising
Advertising

சைபராபாத் காவல் ஆணையர் விசி சஜ்ஜனார் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் சைபராபாத் காவல் ஆணையர் விசி சஜ்ஜனார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு..

*நவம்பர் 27ம் தேதி இரவு பெண் மருத்துவர் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

*அறிவியல் முறைப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பெண் மருத்துவர் பலாத்கார வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்தோம்.

*வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வைத்து ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருந்தோம்.

முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேசவலுவிடம் விசாரணை நடத்தி வந்தோம்.

*கைது செய்யப்பட்ட 4 பேரும் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தோம்.

*டிசம்பர் 4 மற்றும் 5ந் தேதிகளில் நான்கு பேரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது பெண் டாக்டரின் செல்போன் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்துள்ளதாக கூறினர்.

*4வது நாள் சொர்ணப்பள்ளி சிறையில் இருந்து பலாத்காரம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் அழைத்துச் சென்றோம்.

*4 பேரையும் அழைத்துச் சென்ற போது, 10த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சென்று இருந்தனர்.  

*செல்போனை தேடும் போது அது இங்கு இருக்கிறது, அங்கு இருக்கிறது என போக்கு காட்டினர்.

*4 பேரும் ஒன்றாக சேர்ந்து காவலர்களை தாக்கினர். கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

*கைது செய்யப்பட்டவர்களில் சென்னகேசவலு, முகமது ஆரிப் ஆகிய இரண்டு பேர் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து தாக்க முயன்றனர்

*போலீஸ் மீது இரண்டு பேரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாகிவிட்டது

*தற்காப்புக்காக போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேரும் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர்.

*குற்றவாளிகள் 4 பேரும் தெலுங்கானா - ஆந்திரா எல்லையில் மேலும் பல குற்றங்களில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  

*காலை 5.45 மணியில் இருந்து 6.15க்குள் என்கவுன்டர் நடைபெற்றது.

*கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

*4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது.

* 4 பேர் என்கவுன்ட்டர் குறித்து மாநில அரசுக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் விளக்கம் தரப்படும்.

சம்பவத்தின் பின்னணி

கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அஇதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.தேசிய நெடுஞ்சாலை 44ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

Related Stories: