ஓசூர் வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்

*விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர் : ஓசூர் வனப்பகுதிக்கு மீண்டும் வந்த 30 யானைகளால், விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, ஆண்டுதோறும்  100க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்,  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருவது வழக்கம். கடந்த வாரம் கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. இதையறிந்த வனத்துறையினர், அந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு போராடி விரட்டியடித்தனர். ஆனால், விரட்டப்பட்ட 130 யானைகளில், நேற்று 30 யானைகள் ஒரு குழுவாக பிரிந்து, சினிகிரிப்பள்ளி வழியாக ஓசூர் வனப்பகுதிக்கு வந்துள்ளன. தற்போது இப்பகுதியில் நெல், சாமை, ராகி உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

 ஓசூர் வனப்பகுதிக்கு வந்துள்ள 30 யானைகளால், அறுவடை செய்யும் தருவாயில் உள்ள பயிர்கள் சேதமாகும் அபாயம் உள்ளதால், யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, விவசாயிகள் வனப்பகுதிக்கு தனியே வர வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: