போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

ராஜஸ்தான்: போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்; நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் பாலியல் குற்றவாளிகள் கருணை மனு அளிக்க உரிமை கிடையாது. நாடாளுமன்றம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார். இதனிடையே 2012 ம் ஆண்டு டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

தொடர்ந்து இவரின் கருணை மனுவை ஜனாதிபதியும் நிராகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: