×

நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்த தனியார் நகைக்கடை: ரூ.17 கோடி வசூலித்துவிட்டு இழுத்தடிப்பதாக பொதுமக்கள் புகார்

சென்னை: விளம்பரத்தை நம்பி சென்னை கேஎப்ஜே தங்க நகைசேமிப்பு திட்டத்தில் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் அண்ணா நகர் புரசைவாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில் இயங்கி வந்த கேரளா பேஷன் ஜுவல்லரி நகைக்கடையில் ஜிஎல் ப்ளஸ் என்ற ரூ.1999 ரூபாய் செலுத்தி தங்கநகை சேமிப்பு திட்டத்தில் எண்ணறோர் உறுப்பினராக சேர்ந்தனர். அதேபோல, குறுகிய காலத்தில் பணத்தை சம்பாரிப்பது எப்படி என்று கூட்டாக யோசித்து தங்கள் பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய தங்க நகைகளாக மாற்றும் தங்க நகை சேமிப்பு திட்டத்திலும் பலர் ஆவலோடு சேர்ந்தனர். போட்டி போட்டு பணம் செலுத்தியதால் கோடிகள் குவியத்தொடங்கியது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிய கேரள பேஷன் ஜூவல்லரிக்கு இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் மட்டும் 17 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே விளம்பரத்துக்கு 10 கோடி ரூபாய் பாக்கி வைத்ததால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுனில் செரியன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அங்கு சீட்டு கட்டிய பலருக்கும் முதிர்வு தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள், கே.எஃப்.ஜே வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் சீட்டுக்கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பணம் இல்லாவிட்டால் நகையாவது வாங்கிச்செல்லலாம் என்றால் அங்கு வெற்றுக் கடையும், வெறுங்கையுடன் மேனஜரும் தான் இருக்கின்றனர் என்று ஏமாந்தவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இந்த விவரம் தெரியாமல் இன்னும் ஆன்லைன் மூலமாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சிலர் தொடர்ந்து பணம்செலுத்தி வரும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, கடையின் உரிமையாளர் கைதாவதில் இருந்து தப்ப சோழிங்க நல்லூர் நிலத்தை விற்று பணம் தந்து விடுவாதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே வங்கியில் பெற்ற 32 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் இழுத்தடித்ததால் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கடனுக்காக வங்கிகள் அள்ளிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.17 கோடி, மற்றும் ரூ.12 கோடி இதுவரை திருப்பி கொடுத்து விட்டதாகவும் மீதி 5 கோடி ரூபாயை வங்கியில் இருந்து நகையை மீட்டதும் கொடுத்து விடுவதாக சுனில் செரியன் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது, தங்கள் நகைகளையும், பணத்தையும் மீட்டு தரக்கோரி வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags : jeweler ,Rs , Chennai, Jewelery, Jewelry Storage, Fraud, KFJ Jewelery, Public
× RELATED ரூ.1.5 கோடி நிதி மோசடி பெண் உள்பட 4 பேர் கைது